சென்னையில் ஜூன் 30-ஆம் தேதி மாலை திரையிட திட்டமிடப்பட்டிருந்த ‘திருப்பரங்குன்றம் Files’ ஆவணப்படத்தின் திரையிடல் காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கைக்கு தமிழக அரசு மற்றும் காவல்துறைக்கு பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் பாஜக நிர்வாகிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இந்த ஆவணப்படம் மத நல்லிணக்கத்தை மையமாகக் கொண்டதாக விளம்பரப்படுத்தப்பட்டிருந்தாலும், அதன் திரையிடல் சமூகத்தில் மதப் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அமையக்கூடும் என எதிர்ப்பு எழுந்தது. இதுதொடர்பாக காவல்துறையின் கவனத்துக்கு புகார்கள் கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி. செல்வம், சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், சென்னை திருப்பரங்குன்றம் பகுதியில் நடைபெற இருந்த ‘திருப்பரங்குன்றம் Files’ ஆவணப்படத்தின் திரையிடலை காவல்துறை தடுத்து நிறுத்தியிருப்பதை வரவேற்று, மதப் பதற்றத்தைத் தவிர்க்க நடவடிக்கை எடுத்த தமிழக அரசு மற்றும் காவல்துறைக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
அதேபோல், இந்து முன்னணி அமைப்பின் காடேஸ்வர அவர்களும் இந்த தடையை வரவேற்று உள்ளார். இந்து தமிழர் கட்சியின் தலைவர் ராம ரவிக்குமார் வெளியிட்டுள்ள பதிவிலும், ஒத்த கருத்துடைய தேசபக்தர்கள், இந்து உணர்வாளர்கள் மற்றும் முருக பக்தர்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து ஆவணப்படத்தின் திரையிடல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறி, தமிழக அரசு மற்றும் காவல்துறைக்கு நன்றி தெரிவித்துள்ளார்.


