சிந்து நதிநீர், இந்தியாவுக்கு பாகிஸ்தான் அமைச்சரின் எச்சரிக்கை!

சிந்து நதிநீர் ஒப்பந்தம் தொடர்பாக இந்தியாவுக்கு பாகிஸ்தான் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் முசாதிக் மாலிக் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். “எங்களுக்கு உரிமையான நீரை தடுக்க முயன்றால், அந்தக் கைகளை வெட்டுவோம்” என்று அவர் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா, பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை செயலற்ற நிலையில் வைத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் தொடர்ந்து சர்வதேச அளவில் குரல் எழுப்பி வருகிறது.

1960-ஆம் ஆண்டு உலக வங்கி மத்தியஸ்தத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே சிந்து நதிநீர் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின்படி சிந்து நதிநீர் அமைப்பில் உள்ள 6 நதிகளில், ரவி, பியாஸ், சட்லெஜ் ஆகிய 3 கிழக்கு நதிகளின் முழு பயன்பாட்டு உரிமை இந்தியாவுக்கும், சிந்து, ஜீலம், செனாப் ஆகிய 3 மேற்கு நதிகளின் நீரை பெரும்பாலும் பயன்படுத்தும் உரிமை பாகிஸ்தானுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் பாசன விவசாய நிலங்களில் சுமார் 80 சதவீதம் இந்த நதிநீர் அமைப்பையே சார்ந்துள்ளதால், இந்த ஒப்பந்தம் அந்நாட்டின் நீர்வள பாதுகாப்பில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.இந்த நிலையில், பாகிஸ்தான் அமைச்சரின் இந்தக் கருத்து இருநாடுகளுக்கிடையேயான நீர்வளப் பிரச்சினையை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.

Scroll to Top