மேக்கேதாது அணையில் ராகுல் காந்தியை விமர்சித்த அன்புமணி ராமதாஸ்!

மேக்கேதாது அணைத் திட்டம் தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் செயல்படுத்தப்படவுள்ள கிரேட் நிக்கோபார் வளர்ச்சித் திட்டத்திற்கு சுற்றுச்சூழல் பாதிப்பை காரணம் காட்டி ராகுல் காந்தி எதிர்ப்பு தெரிவிக்கிறார்.

ஆனால், சுமார் 12,500 ஏக்கர் வனப்பகுதி பாதிக்கப்படும் என்று கூறப்படும் கர்நாடகாவின் மேக்கேதாது அணைத் திட்டம் குறித்து மட்டும் அவர் மவுனமாக இருப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.”அந்தமானுக்கு ஒரு நீதி; கர்நாடகாவுக்கு ஒரு நீதியா?” என்றும் அன்புமணி சாடினார்.

மேலும், பெங்களூரு குடிநீருக்காகவே இந்த அணை கட்டப்படுவதாக கர்நாடக அரசு கூறுவது ஏற்கத்தக்கதல்ல என்றும், ஏற்கனவே காவிரி ஆற்றில் கர்நாடகாவிடம் 115 டி.எம்.சி. அளவிற்கு நீரை சேமிக்கும் அணைகள் உள்ள நிலையில், குடிநீருக்கு 10 முதல் 12 டி.எம்.சி. நீர் போதுமானதாக இருக்கும் போது, 70 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட அணை ஏன் தேவைப்படுகிறது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

மேக்கேதாது அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டுக்கான காவிரி நீர் வரத்து பாதிக்கப்பட்டு, டெல்டா மாவட்டங்களின் விவசாயமும், குடிநீர் தேவையும் கடுமையாக பாதிக்கப்படும் என்று எச்சரித்த அன்புமணி, இந்தத் திட்டத்திற்கு ராகுல் காந்தி வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Scroll to Top