தீவிரவாத மற்றும் குண்டுவெடிப்பு வழக்குகளில் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளை “இஸ்லாமிய சிறைக்கைதிகள்” என அமைச்சர் வன்னியரசு குறிப்பிடுவது தவறான முன்னுதாரணம் என பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட குற்றங்களில் சிக்கியவர்களை மட்டுமே மத அடையாளத்துடன் இணைத்து பேசுவது, ஒட்டுமொத்த இஸ்லாமியர்களையும் தீவிரவாதத்துடன் தொடர்புபடுத்தும் ஆபத்தான கருத்துருவாக்கத்தை உருவாக்குவதாக அவர் கூறியுள்ளார்.
மேலும், “வந்தே மாதரம்” பாடல் குறித்து வன்னியரசு முன்பு தெரிவித்த கருத்துகளையும் சுட்டிக்காட்டியுள்ள அஸ்வத்தாமன், நாட்டுப்பற்றுடன் வாழும் இஸ்லாமியர்களின் உணர்வுகளையும் பங்களிப்புகளையும் மறைக்கும் வகையிலான பொதுமைப்படுத்தல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றார்.
கோவை குண்டுவெடிப்பு குற்றவாளி பாஷா தொடர்பான நிகழ்வுகள் மற்றும் விசிக தலைவர்களின் சில கருத்துகளையும் குறிப்பிட்டுள்ள அவர், விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து இஸ்லாமிய அடிப்படைவாத சக்திகளுக்கு ஆதரவான அரசியலை முன்னெடுத்து வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
சமூகநலத்துறை அமைச்சர் என்ற பொறுப்பான பதவியில் இருக்கும் வன்னியரசு, தீவிரவாத வழக்குகளில் தண்டனை பெற்றவர்களை மத அடையாளத்துடன் இணைத்து குறிப்பிடுவதை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அஸ்வத்தாமன் வலியுறுத்தியுள்ளார்.


