இஸ்லாமில் சாதியே இல்லை… 3.5% உள் ஒதுக்கீடு ஏன்?– வேலூர் இப்ராஹிம் கேள்வி

தமிழகத்தில் இஸ்லாமியர்களுக்கான 3.5 சதவீத உள் ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று பாஜக சிறுபான்மையினர் அணியின் தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார். மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.

அண்மையில், மதராஸ் உயர்நீதிமன்றம் 2024-ஆம் ஆண்டு தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ததை சுட்டிக்காட்டிய வேலூர் இப்ராஹிம், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவர் இஸ்லாம் மதத்திற்கு மாறினாலும், அவர் குறிப்பிட்ட பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் பிரிவைச் சேர்ந்தவர் எனக் கருதி சலுகை வழங்க முடியாது என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளதாகக் கூறினார்.

மேலும், “இந்து ஒருவர் இஸ்லாத்திற்கு மாறினால் அவர் வெறும் முஸ்லிம்தான்; அவருக்கு புதிய சாதி அடையாளம் உருவாகாது” என்ற உயர்நீதிமன்றத்தின் முந்தைய சட்ட நிலைப்பாட்டையும் அவர் நினைவுபடுத்தினார்.

2024-ஆம் ஆண்டு திமுக அரசு வெளியிட்ட அரசாணை நீதிமன்ற தீர்ப்புகளுக்கும், இஸ்லாமிய சமத்துவக் கொள்கைக்கும் முரணானது என்றும் அவர் குற்றம்சாட்டினார். இஸ்லாம் சாதியை ஏற்காத மதம் என்பதால், சாதி அடிப்படையிலான உள் ஒதுக்கீடு தொடர்வது இஸ்லாமின் அடிப்படை போதனைகளுக்கே எதிரானது என்றும் அவர் தெரிவித்தார்.

உயர்நீதிமன்றம் அரசாணையை ரத்து செய்தது சரியான முடிவு என்றும் அவர் கூறினார். உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ள நிலையில், அதனை கைவிட வேண்டும் என்றும் வேலூர் இப்ராஹிம் வலியுறுத்தினார்.

அரசியலமைப்பின் சமத்துவக் கொள்கைக்கும், இஸ்லாமின் அடிப்படை கோட்பாடுகளுக்கும் முரணாக உள்ள 3.5 சதவீத முஸ்லிம் உள் ஒதுக்கீட்டை முதலமைச்சர் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

Scroll to Top