தவெக அரசுக்கு இந்து மக்கள் கட்சி கண்டனம்!

நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் முன்வைத்த கோரிக்கைகள், ஏற்கனவே திமுக ஆட்சிக் காலத்தில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகளின் மறுபதிப்பாகவே உள்ளதாக இந்து மக்கள் கட்சி–தமிழகம் விமர்சித்துள்ளது. “அரைத்த மாவை மீண்டும் அரைக்கக் கூடாது” என்று குறிப்பிட்டுள்ள கட்சி, தமிழக நலனுக்கான புதிய திட்டங்களை முன்வைப்பதற்குப் பதிலாக பழைய அரசியல் கோரிக்கைகளையே மீண்டும் வலியுறுத்தியிருப்பதாக குற்றம்சாட்டியுள்ளது.

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும், பிளஸ்–2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை திமுகவின் நீண்டகால நிலைப்பாடு எனக் கூறியுள்ள இந்து மக்கள் கட்சி, அதையே தற்போதைய அரசு மீண்டும் முன்வைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், நிலுவையில் உள்ள கல்வி நிதியை விடுவிக்க வேண்டும், புதிய கல்விக் கொள்கையை கட்டாயப்படுத்தக் கூடாது என்ற கோரிக்கைகளும் முந்தைய அரசின் கருத்துக்களையே பிரதிபலிப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது.

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் திராவிட இயக்கத்தின் பழைய கோரிக்கையாகவே இருப்பதாக கட்சி கூறியுள்ளது. மத்திய அரசுடன் மோதல் போக்கைத் தவிர்த்து, தமிழக வளர்ச்சி மற்றும் மக்கள் நலத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

நீட் தேர்வு சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கும் மருத்துவக் கல்வி வாய்ப்பை உருவாக்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள இந்து மக்கள் கட்சி, அதை ரத்து செய்ய முடியாது என்ற நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. அதேபோல், மும்மொழிக் கல்வி, நவோதயா பள்ளிகள் மற்றும் சமக்ர சிக்ஷா திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த வேண்டும் என்றும் கோரியுள்ளது.

எனினும், ஓகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம், சென்னை–கன்னியாகுமரி அதிவேக ரயில் பாதை மற்றும் கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளிட்ட உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு முழு ஆதரவு அளிப்பதாக இந்து மக்கள் கட்சி–தமிழகம் தெரிவித்துள்ளது.

Scroll to Top