மேஜர் முகுந்த் வரதராஜன் பெயரில் வேளச்சேரி-தாம்பரம் நெடுஞ்சாலை!

பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ அதிகாரி மேஜர் முகுந்த் வரதராஜனின் நினைவைப் போற்றும் வகையில், தாம்பரம் – வேளச்சேரி சாலைக்கு அவரது பெயரை சூட்டுவதற்கான தீர்மானம் தாம்பரம் மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்திய ராணுவத்தில் பணியாற்றிய மேஜர் முகுந்த் வரதராஜன், பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையின் போது வீரமரணம் அடைந்தார். அவரது வீரத் தியாகத்தைப் பாராட்டி, இந்தியாவின் உயரிய அமைதிக்கால வீர விருதான ‘அசோக் சக்ரா’ அவருக்கு வழங்கப்பட்டது. அவரது குடும்பம் தற்போது தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட கிழக்கு தாம்பரத்தில் வசித்து வருகிறது.

மேஜர் முகுந்த் வரதராஜனின் சேவையையும் தியாகத்தையும் கௌரவிக்கும் நோக்கில், கிழக்கு தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து வேளச்சேரி வரை செல்லும் தாம்பரம் – வேளச்சேரி சாலைக்கு அவரது பெயரைச் சூட்டும் பரிந்துரையை நகராட்சி நிர்வாக இயக்குநர் 2025 ஆகஸ்ட் 26-ஆம் தேதி கடிதம் மூலம் மாநகராட்சிக்கு அனுப்பியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் சட்டம், 1998 மற்றும் விதிகள், 2023-ன் பிரிவு 186-ன் படி, சாலையின் பெயரை மாற்றுவதற்கான அனுமதியைப் பெற மாநகராட்சி சார்பில் 2025 செப்டம்பர் 19-ஆம் தேதி நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

பின்னர், தேவையான தீர்மானத்தை நிறைவேற்றி அறிக்கை அனுப்புமாறு 2025 அக்டோபர் 23-ஆம் தேதி முதன்மை செயலர் அலுவலகத்திலிருந்து அறிவுறுத்தல் வந்தது. இதையடுத்து, நேற்று நடைபெற்ற தாம்பரம் மாநகராட்சி மன்றக் கூட்டத்தில், தாம்பரம் – வேளச்சேரி சாலைக்கு “மேஜர் முகுந்த் வரதராஜன் சாலை” என பெயரிடுவதற்கான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

Scroll to Top