ராமர் கோயில் நன்கொடை முறைகேடு: 8 பேர் கைது

ரூ.80 லட்சம் பறிமுதல்உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் பக்தர்கள் வழங்கிய நன்கொடைகளை கையாள்வதில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வழக்கில், கோயிலின் காணிக்கைப் பணம் மற்றும் மதிப்புமிக்க பொருட்களை எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்த 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.கடந்த சில மாதங்களாக நன்கொடை பணத்தில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் கோரிக்கையின் பேரில் சிறப்பு விசாரணைக் குழு (SIT) அமைக்கப்பட்டது.

அந்தக் குழுவின் இடைக்கால அறிக்கையில் முறைகேட்டுக்கான ஆதாரங்கள் இருப்பதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர். கைது செய்யப்பட்டவர்களில் 6 பேர் வங்கி ஊழியர்கள் என்றும், கோயிலின் காணிக்கைப் பணத்தை எண்ணும் பணியில் அவர்கள் நியமிக்கப்பட்டிருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

அவர்களிடமிருந்து இதுவரை சுமார் ரூ.79.85 லட்சம் முதல் ரூ.80 லட்சம் வரை ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த முறைகேட்டின் அளவு பல கோடி ரூபாயாக இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. கைது செய்யப்பட்ட 8 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், மேலதிக விசாரணைக்காக காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உறுதியளித்துள்ளார். இதேவேளை, இந்த வழக்கில் முழுமையான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தியுள்ளன.

Scroll to Top