ஆபரேஷன் சிந்தூரில் வீரமரணம் அடைந்த 6 வீரர்களின் பெயர்கள் முதல் முறையாக அதிகாரப்பூர்வமாக வெளியீடு- ஆபரேஷன் சிந்தூரில் உயிர்நீத்த இந்திய ராணுவ வீரர்களின் பெயர்களை மத்திய அரசு முதல் முறையாக அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்த வீரர்களின் பெயர்கள், டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவகத்தின் (National War Memorial) Roll of Honour பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
இதன் மூலம், இந்த ராணுவ நடவடிக்கையில் உயிர்தியாகம் செய்த வீரர்களுக்கு அரசு அதிகாரப்பூர்வ அஞ்சலி செலுத்தியுள்ளது. வெளியிடப்பட்டுள்ள 6 வீரர்களில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 5 பேரும், இந்திய விமானப்படையைச் சேர்ந்த ஒருவரும் அடங்குவர்.
அவர்கள்: சுபேதார் மேஜர் பவன் குமார், ரைஃபிள்மேன் சுனில் குமார் (வீர் சக்ரா), லான்ஸ் நாயக் தினேஷ் குமார், அக்னிவீர் மூட் முரளி நாயக், ஹவில்தார் சுனில் குமார் சிங் மற்றும் இந்திய விமானப்படை சார்ஜெண்ட் சுரேந்திர குமார் (வாயு பதக்கம்). இவர்களின் பெயர்கள் தேசிய போர் நினைவகத்தில் பொறிக்கப்பட உள்ளன.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பொதுமக்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, 2025 மே 7-ஆம் தேதி இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து ஆபரேஷன் சிந்தூரை மேற்கொண்டது.
இந்த நடவடிக்கையின்போது உயிர்நீத்த வீரர்களின் அடையாளங்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படாத நிலையில், தற்போது முதல் முறையாக வெளியிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


