முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்துக்கு எதிரான லஞ்ச வழக்கை முடித்து வைப்பதாக முன்பு தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை திரும்பப் பெற அனுமதி கோரி, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
அதிமுக ஆட்சிக் காலமான 2011 முதல் 2016 வரை வீட்டு வசதித் துறை அமைச்சராக இருந்த வைத்திலிங்கம், சென்னை பெருங்களத்தூரில் உள்ள ஸ்ரீராம் ப்ராப்பர்ட்டீஸ் நிறுவனத்தின் அடுக்குமாடி கட்டிடத் திட்டத்திற்கு அனுமதி வழங்குவதற்காக ரூ.28 கோடி லஞ்சம் பெற்றதாக அறப்போர் இயக்கம் 2022-ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தது.
இந்த புகாரின் அடிப்படையில், சுமார் இரண்டு ஆண்டுகள் கழித்து 2024 செப்டம்பரில் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது. இதனைத் தொடர்ந்து அமலாக்கத் துறையும் தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. இந்த வழக்கு சென்னை அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்தது.
இந்நிலையில், வைத்திலிங்கம் கடந்த ஜனவரி மாதம் திமுகவில் இணைந்ததைத் தொடர்ந்து, அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு போதுமான ஆதாரங்கள் இல்லை எனக் கூறி, வழக்கை முடித்து வைப்பதற்கான அறிக்கையை லஞ்ச ஒழிப்புத் துறை தாக்கல் செய்திருந்தது. இதற்கு எதிராக அறப்போர் இயக்கமும், அமலாக்கத் துறையும் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்தன.
தற்போது தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள சூழலில், வழக்கை மீண்டும் விசாரிக்க முடிவு செய்துள்ளதாகக் கூறி, வழக்கை முடித்து வைக்கும் அறிக்கையை திரும்பப் பெற லஞ்ச ஒழிப்புத் துறை நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதி எஸ். கார்த்திகேயன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தன. அப்போது, அமலாக்கத் துறையின் எதிர்ப்பு மனுவின் ஏற்புடைய தன்மை முதலில் பரிசீலிக்கப்படும் என நீதிபதி தெரிவித்தார். மேலும், அனைத்து மனுக்களின் விசாரணையையும் ஜூன் 29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.


