அமைச்சர் வன்னி அரசையும் சபாநாயகரையும் நீக்குக: எச். ராஜா!

பாஜகவின் மூத்த தலைவர் H. ராஜா அவர்கள் வெளியிட்ட வலைத்தள பதிவில், “விசிகவைச் சேர்ந்த தமிழக அமைச்சர் திரு. வன்னியரசு மற்றும் தவெகவைச் சேர்ந்த தமிழக சபாநாயகர் திரு. JCD. பிரபாகர் ஆகியோருக்கு கிறிஸ்தவ அமைப்புகள் சார்பில் சென்னையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் அமைச்சர் வன்னியரசு பேசிய கருத்துகள் மத்திய அரசுக்கு எதிரானதாகவும், தேச ஒற்றுமையை பாதிக்கும் வகையிலும், மத உணர்வுகளைத் தூண்டும் நோக்கத்துடனும் அமைந்துள்ளதாக கருதப்படுவதால் அவை வன்மையாக கண்டிக்கத்தக்கவை.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீது பதவிப்பிரமாணம் செய்து கொண்ட அமைச்சர் ஒருவர், ஒரு குறிப்பிட்ட மத அமைப்பு நடத்திய நிகழ்வில் கலந்துகொண்டு, இந்து தர்மத்தையும் இந்து மக்களையும் விமர்சித்ததாகக் கூறப்படுவது அரசியலமைப்பின் மதச்சார்பின்மை கொள்கைக்கு முரணானதாகும். எனவே தமிழக முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் உடனடியாக அமைச்சர் வன்னியரசை அமைச்சரவைப் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும்.

அதேபோல், சபாநாயகர் JCD. பிரபாகர் அவர்கள் பொறுப்பேற்ற நாள் முதல் சட்டப்பேரவையில் பைபிள் வசனங்களை வாசித்து வருவது குறித்தும், பொதுமக்களிடையே பைபிள் வழங்கி கிறிஸ்தவத்தைப் பரப்பியதாக அவர் முன்னர் பேசிய காணொளிகள் சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டுள்ளன. இதனால் அவர் சபாநாயகர் பொறுப்பை மதச்சார்பற்ற முறையில் மேற்கொள்கிறாரா என்ற கேள்வி எழுகிறது.

மேலும், அமைச்சர் வன்னியரசு அவர்கள் தாம் பின்பற்றும் மதத்தை உயர்த்திக் காட்டும் நோக்கில் இந்து தர்மத்தை இழிவுபடுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாத செயல். மதச்சார்பற்ற சமூகநீதியே தமது அரசியல் கொள்கை என்று அறிவித்துள்ள தமிழக அரசு, இவ்விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதே நிகழ்வில் சபாநாயகர் JCD. பிரபாகர் அவர்கள் முன்னிலையில், மரபுசார்ந்த மத நம்பிக்கைகள் விமர்சிக்கப்பட்டபோதும் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்தது வருத்தமளிக்கிறது. சபாநாயகர் அனைவருக்கும் பொதுவான நடுநிலையுடன் செயல்பட வேண்டுமேயன்றி, எந்த மதத்திற்கும் ஆதரவாக செயல்படக் கூடாது.” என்று கூறி உள்ளார்.

Scroll to Top