பயங்கரவாதத்தை இந்தியா சும்மா விடாது: ஜெய் சங்கர் அறிவிப்பு!

பின்லாந்தில் நடைபெற்ற #KultarantaTalks மாநாட்டில், பின்லாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் எலினா வால்டோனன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் உதவி வெளியுறவுத்துறை அமைச்சர் லானா நுசைபெ ஆகியோருடன், “வளர்ந்து வரும் சக்திகளும் புதிய புவிசார் அரசியல் போட்டியும்” என்ற தலைப்பில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கலந்துரையாடலில் பங்கேற்றார்.

இந்த சந்திப்பின் போது, உலகின் பல பகுதிகளில் நீடித்து வரும் மோதல்கள், சம்பந்தப்பட்ட நாடுகளை மட்டுமின்றி உலகளாவிய பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு சூழல்களிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார். இந்த மோதல்களின் விளைவுகளை குறைத்து, பேச்சுவார்த்தை மற்றும் தூதரக முயற்சிகளுக்கு ஏற்ற சூழலை உருவாக்க சர்வதேச சமூகம் தொடர்ந்து செயல்பட வேண்டியது அவசியம் என வலியுறுத்தினார்.

மேலும், உலகளாவிய விநியோகச் சங்கிலிகளை பலப்படுத்துவதன் அவசியத்தையும் அவர் எடுத்துரைத்தார். அதிகரித்து வரும் நிச்சயமற்ற சூழ்நிலையில், விநியோக ஆதாரங்களை பல்வகைப்படுத்தி, தாங்கும் திறன் மற்றும் மாற்று ஏற்பாடுகளை உருவாக்குவது முக்கியம் என்றார்.

இந்தியாவின் எரிசக்தி கொள்முதல் கொள்கைகள் தேசிய நலனை அடிப்படையாகக் கொண்டவை என்றும், விலைச் சிக்கனம் மற்றும் கிடைக்கும் தன்மை ஆகியவற்றின் அடிப்படையிலேயே முடிவுகள் எடுக்கப்படுகின்றன என்றும் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

வளைகுடா நாடுகளுடனான இந்தியாவின் உறவு, மக்களிடையேயான நெருக்கமான தொடர்புகள், எரிசக்தி ஒத்துழைப்பு மற்றும் வளர்ந்து வரும் பாதுகாப்பு, மூலோபாய கூட்டாண்மைகள் ஆகியவற்றால் வலுப்பெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

போர் முறைகளின் தன்மை வேகமாக மாறி வரும் நிலையில், புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் நவீன ஆயுதங்கள் முக்கிய பங்காற்றுகின்றன என்றும், இது இந்தியா – ஐரோப்பிய ஒன்றியம் இடையேயான பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஒத்துழைப்புக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், இந்த ஆண்டிலேயே இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையே சுதந்திர வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகள், மூலோபாய மற்றும் பாதுகாப்பு கூட்டாண்மை, விரிவான மக்கள் இடம்பெயர்வு ஒத்துழைப்பு கட்டமைப்பு உள்ளிட்ட முக்கிய முன்னேற்றங்கள் எட்டப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.

Scroll to Top