ஜம்மு-காஷ்மீரில் உள்ள உலகப் புகழ்பெற்ற அமர்நாத் குகையில் இயற்கையாக உருவாகும் பனி சிவலிங்கம், இந்த ஆண்டு யாத்திரை தொடங்கிய ஆறே நாட்களில் 90 சதவீதத்துக்கும் மேல் உருகியதாக வெளியான தகவல் பக்தர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
ஜூலை 3-ஆம் தேதி தொடங்கிய 57 நாள் அமர்நாத் யாத்திரையில், முதல் சில நாட்களிலேயே 56 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். கடந்த ஆண்டைவிட யாத்திரிகர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமர்நாத் குகையில் உருவாகும் இந்த பனி சிவலிங்கம் செயற்கையாக உருவாக்கப்படுவது அல்ல. குகையின் மேற்கூரையில் இருந்து சொட்டும் நீர், கடும் குளிரில் உறைந்து இயற்கையாக உருவாகும் பனிப்படிவமே பக்தர்களால் “பாபா பர்பானி” என்று வழிபடப்படுகிறது.
வழக்கமாக மே முதல் ஆகஸ்ட் வரை அதன் அளவு அதிகரித்து, பின்னர் இயற்கையாகவே குறையத் தொடங்கும்.ஆனால் இந்த ஆண்டு வெறும் சில நாட்களிலேயே பனி சிவலிங்கம் பெருமளவில் உருகியிருப்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
இதற்கு முக்கிய காரணமாக, இமயமலைப் பகுதியில் பதிவாகியுள்ள அதிக வெப்பநிலை, பருவநிலை மாற்றம், பனிப்பாறைகள் உருகும் வேகம் அதிகரித்திருப்பது, குகையின் நுண்ணிய சுற்றுச்சூழல் மாற்றங்கள் ஆகியவை இருக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
மேலும், இந்த ஆண்டு யாத்திரையில் அதிகளவிலான பக்தர்கள் வருகை, குகைக்குள் மனிதர்களின் உடல் வெப்பம், விளக்குகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பிற மனித செயல்பாடுகளாலும் குகையின் வெப்பநிலை மாறியிருக்கலாம் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.
ஆனால் இதுகுறித்து உறுதியான அறிவியல் முடிவு எதுவும் இன்னும் வெளியிடப்படவில்லை.இதனிடையே, அமர்நாத் லங்கர் அமைப்பு இந்த சம்பவம் குறித்து சுயாதீன அறிவியல் ஆய்வு நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.
அதேநேரம், ஸ்ரீ அமர்நாத் ஷ்ரைன் போர்டு இதுவரை பனி சிவலிங்கம் 90 சதவீதம் உருகியதாக அதிகாரப்பூர்வ மதிப்பீட்டை வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


