ரூ.110 கோடி நிலம்… ரூ.2 கோடிக்கு கைமாறியதா?

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு சொந்தமானதாகக் கூறப்படும் சுமார் 1.40 ஏக்கர் நிலம் தொடர்பாக புதிய சர்ச்சை வெடித்துள்ளது.சந்தை மதிப்பில் சுமார் 110 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த நிலம், வெறும் 2 கோடி ரூபாய்க்கு தனிநபர்களின் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கோவில் நிர்வாகம் இந்த பதிவு குறித்து ஏற்கனவே ஆட்சேபனை தெரிவித்திருந்த நிலையிலும், பதிவு நடைபெற்றதாக கூறப்படுகிறது. மேலும், சம்பந்தப்பட்ட சார் பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அதிகாரிகளுக்கு கோவில் நிர்வாகம் கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விவகாரத்தில் பதிவுத்துறை அதிகாரிகள் மற்றும் தொடர்புடைய நபர்களின் பங்கு குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.இந்த குற்றச்சாட்டுகளை இந்து தமிழர் கட்சியின் தலைவர் ராம ரவிகுமார் முன்வைத்துள்ளார்.

இதனிடையே, இதே விவகாரம் தொடர்பாக ஏற்கனவே சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பிலான கோவில் சொத்தை சட்டவிரோதமாக பதிவு செய்ததாக சம்பந்தப்பட்ட நபர்கள் மற்றும் சில அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், சர்ச்சைக்குரிய பத்திரப்பதிவை ரத்து செய்யும் நடவடிக்கைகளும் துறை ரீதியாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பழனி முருகன் கோவிலின் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து தொடர்பாக எழுந்துள்ள இந்த குற்றச்சாட்டு, தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தில் முழுமையான விசாரணை நடத்தப்பட்டு, உண்மைகள் வெளிச்சத்துக்கு வர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

Scroll to Top