மதுரையின் அடையாளமாக விளங்கும் வைகை நதியை மீட்டெடுக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஷ்வாநாத் அர்லேக்கர் வலியுறுத்தியுள்ளார்.
வைகை நதியின் தற்போதைய நிலை குறித்து கவலை தெரிவித்த அவர், அரசுத் துறைகள் மட்டுமின்றி பொதுமக்கள், இளைஞர்கள், தன்னார்வ அமைப்புகள் என அனைவரும் இணைந்து நதியை பாதுகாக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். குறிப்பாக, இளைஞர்களே இந்த சுற்றுச்சூழல் இயக்கத்தின் முன்னோடிகளாக மாற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், “தேவைப்பட்டால் ராஜ்பவனே நேரடியாக களமிறங்கி வைகை நதியை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபடத் தயாராக உள்ளது” என்று ஆளுநர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அரசு மட்டுமல்ல, ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆளுநரின் இந்த அறிவிப்புக்கு திரைப்பட இயக்குநர் சீனு ராமசாமி தனது சமூக வலைதளப் பதிவின் மூலம் மனமார்ந்த வரவேற்பு தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள பதிவில், “வைகை நதியின் மீது தாங்கள் கொண்டிருக்கும் அளவற்ற அன்புக்கு எனது இதயப்பூர்வமான நன்றிகள்.
தேவைப்பட்டால் ராஜ்பவனே நேரடியாக களமிறங்கி வைகையை சுத்தப்படுத்தத் தயாராக இருப்பதாக தாங்கள் அறிவித்திருப்பது உண்மையான அரசியல் முதிர்ச்சியையும், மக்கள் நலனில் கொண்டுள்ள அக்கறையையும் வெளிப்படுத்துகிறது.
இது மதுரை மக்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையை அளித்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.மேலும், “இந்த மண்ணுடனும் அதன் பாரம்பரியத்துடனும் ஆழமான தொடர்பு கொண்ட ஒருவராக, தங்களின் இந்த உயரிய, தொலைநோக்குப் பார்வை கொண்ட முன்முயற்சிக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆளுநர் அர்ளேகரின் இந்த கருத்தும், அதற்கு இயக்குநர் சீனு ராமசாமி தெரிவித்துள்ள பாராட்டும் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளன. வைகை நதியை மீட்டெடுக்கும் முயற்சியில் அரசு, தன்னார்வ அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து செயல்பட வேண்டிய அவசியம் குறித்து இந்த விவகாரம் மீண்டும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.


