ஈரான் என்ற நாடே வரைபடத்தில் இருக்காது– டிரம்ப் எச்சரிக்கை

அமெரிக்கா – ஈரான் இடையேயான மோதல் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். சமீபத்தில் ஈரான் நடத்திய ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களுக்கு பதிலடியாக அமெரிக்கா, ஈரானின் ஏவுகணை களஞ்சியங்கள், ட்ரோன் தளங்கள், ரேடார் அமைப்புகள் உள்ளிட்ட முக்கிய ராணுவ இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனைத் தொடர்ந்து தனது சமூக வலைதள பதிவில் பேசிய டிரம்ப், “ஈரான் மீண்டும் தாக்குதல்களைத் தொடர்ந்தாலோ அல்லது அமைதி முயற்சிகளை நிராகரித்தாலோ, ஈரான் என்ற நாடே உலக வரைபடத்தில் இருக்காது. தேவைப்பட்டால் அந்த வேலையை முழுமையாக முடிப்போம்” என்று கடுமையாக எச்சரித்துள்ளார். இந்த கருத்து சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மறுபுறம், அமெரிக்காவின் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது. மேலும், வளைகுடா பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மற்றும் அமெரிக்காவின் கூட்டணி நாடுகள் குறிவைக்கப்படலாம் என்றும் தெரிவித்துள்ளது. இதனால் மத்திய கிழக்கு முழுவதும் பாதுகாப்பு பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், மோதலை தற்காலிகமாக நிறுத்தி மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்க இரு நாடுகளும் முயற்சி மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், நிலைமை மிகவும் பதற்றமாக இருப்பதால் எந்த நேரத்திலும் மோதல் மீண்டும் வெடிக்கக்கூடும் என்ற அச்சம் சர்வதேச சமூகத்தில் நிலவி வருகிறது.

Scroll to Top