தமிழ்நாடு மின் பகிர்மானக் கழக (TNPDCL) உதவி மின் பொறியாளர் பணியிட நியமனத்தில் நிர்வாகக் குளறுபடிகளால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2020-ஆம் ஆண்டு நடைபெற இருந்த TNPDCL உதவி மின் பொறியாளர் தேர்வு கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் 2022-ஆம் ஆண்டு நிர்வாகக் காரணங்களைக் கூறி ரத்து செய்யப்பட்டதாகவும், அதன் பின்னர் TNPSC மூலம் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டாலும், 2025 வரை எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
இதற்கிடையில், 2024-ஆம் ஆண்டு பொதுப்பணித்துறை (PWD) உதவி மின் பொறியாளர் தேர்வு முடிவுகள் வெளியாகும் முன், TNPDCL-இன் 195 காலிப் பணியிடங்கள் அந்தத் தேர்வு மூலம் நிரப்பப்படும் என திடீரென அறிவிக்கப்பட்டதாகவும், வயது வரம்பு 32 ஆண்டுகள் என நிர்ணயிக்கப்பட்டதால், 2020 முதல் காத்திருந்த பல தகுதியான இளைஞர்கள் பாதிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
கொரோனா காரணமாக போட்டித் தேர்வுகள் தாமதமானால் 2 ஆண்டுகள் வயது தளர்வு வழங்க வேண்டும் என்ற அரசாணை இருந்தபோதிலும், நீண்டகால நிர்வாகத் தாமதத்தை கருத்தில் கொள்ளாமல் போனதாகவும், இதனால் வயது வரம்பைக் காரணம் காட்டி நல்ல மதிப்பெண்கள் பெற்றவர்கள்கூட தகுதி நீக்கம் செய்யப்பட்டதாகவும் அண்ணாமலை குற்றம்சாட்டினார்.
TRB மற்றும் 2013-ஆம் ஆண்டு மின்சார வாரிய ஆட்சேர்ப்புகளில் வழங்கப்பட்டதைப் போல, சிறப்பு வயது தளர்வு வழங்க வேண்டும் என்றும், TNPDCL மற்றும் TNPSC நடவடிக்கைகள் குறித்து வெளிப்படையான விசாரணை நடத்தி, நிர்வாகத் தவறுகளால் பாதிக்கப்பட்ட அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் நிவாரணம் வழங்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.


