விக்டோரியா:இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு, சீஷெல்ஸ் நாட்டின் உயரிய ஜனாதிபதி கவுரவமான ‘Guardian of the Blue Horizon’ விருது அந்நாட்டு அதிபர் டாக்டர் பேட்ரிக் ஹெர்மினி வழங்கி கௌரவித்தார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நீலப் பொருளாதாரம், கடல்சார் வளங்களின் நிலையான மேலாண்மை, காலநிலை மாற்றத்துக்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் சிறிய தீவு நாடுகளின் வளர்ச்சிக்காக அவர் ஆற்றிய பங்களிப்பை பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது முதன்முறையாக வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
விருதைப் பெற்றுக்கொண்ட பிரதமர் மோடி, காலநிலை மாற்றத்தை எதிர்கொண்டு சுற்றுச்சூழலைப் பாதுகாக்க உறுதிபூண்டுள்ள அனைத்து நாடுகளுக்கும் இந்த அங்கீகாரத்தை அர்ப்பணிப்பதாக தெரிவித்தார்.
இந்தியா–சீஷெல்ஸ் நாடுகளின் தூதரக உறவு 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள இந்த தருணத்தில், இந்த விருது இருநாடுகளின் நட்புறவை மேலும் வலுப்படுத்தும் என்றும் அவர் கூறினார்.
சர்வதேச சூரியக் கூட்டணி, Mission LiFE, ‘ஏக் பேட் மா கே நாம்’, International Big Cat Alliance உள்ளிட்ட பசுமை முயற்சிகளில் இந்தியா மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கும் இந்த விருது அங்கீகாரமாகக் கருதப்படுகிறது.
மேலும், சீஷெல்ஸ் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையையும் மோடி இந்தப் பயணத்தில் பெற்றுள்ளார்.


