சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சட்டவிரோத கடத்தல் தடுப்பு தினமான ஜூன் 26-ஐ முன்னிட்டு, தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை மெரீனா கடற்கரை சாலையில் “STOP DRUG – START RUN” என்ற தலைப்பில் மாபெரும் விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது. இதில் முதல்வர் விஜய் நேரில் கலந்து கொண்டு, பொதுமக்களுடன் இணைந்து ஓடி போதைப்பொருள் ஒழிப்புக்கான வலுவான விழிப்புணர்வு செய்தியை மக்களிடம் கொண்டு சென்றார்.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26-ஆம் தேதி உலகம் முழுவதும் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. போதைப்பொருள் பயன்பாட்டால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள், குடும்பச் சீரழிவு, சமூகக் குற்றங்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்காலத்தை பாதுகாக்கும் அவசியம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்த நாளின் முக்கிய நோக்கமாகும்.
இந்த நாளையொட்டி, தமிழ்நாடு அரசு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, நேற்று போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரப் பாடல்களை முதல்வர் விஜய் வெளியிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற இந்த மாரத்தான் நிகழ்ச்சியும் போதை ஒழிப்பு குறித்த சமூக விழிப்புணர்வை வலுப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் விஜய், “விளையாட்டை எடு… போதையை விடு…” என்ற வாசகம் இடம்பெற்றிருந்த விழிப்புணர்வு பலகையில் தனது கையெழுத்தை பதிவு செய்தார். பின்னர், போதைப்பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க உறுதியேற்போம் என்ற உறுதிமொழியை வாசித்தார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான பொதுமக்கள், மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அந்த உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.இதனைத் தொடர்ந்து முதல்வர் விஜய் விழிப்புணர்வு மாரத்தானை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர், பொதுமக்கள், மாணவர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் இணைந்து சில தூரம் ஓடி, போதைப்பொருளுக்கு எதிரான தனது உறுதியை வெளிப்படுத்தினார்.இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, வெங்கட்ராமன் உள்ளிட்ட அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஏராளமான இளைஞர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டு, “போதை இல்லா தமிழகம்” என்ற இலக்கை நோக்கி ஒற்றுமையாக செயல்படுவோம் என்ற செய்தியை வலியுறுத்தினர்.
போதைப்பொருள் ஒழிப்பு என்பது அரசின் பொறுப்பு மட்டுமல்ல; குடும்பம், பள்ளி, கல்லூரி, சமூக அமைப்புகள் மற்றும் ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பும் ஆகும் என்பதை இந்த விழிப்புணர்வு மாரத்தான் மீண்டும் ஒருமுறை எடுத்துரைத்தது.


