புதுடெல்லி: நெதர்லாந்து நாட்டின் ராணி ஹெர் மெஜஸ்டி குயின் மேக்சிமா (Queen Máxima) இந்தியா வருகை தந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து முக்கிய ஆலோசனைகளை மேற்கொண்டார்.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளரின் நிதி ஆரோக்கியத்திற்கான சிறப்பு ஆலோசகராக (UN Secretary-General’s Special Advocate for Financial Healthவும், உலகளவில் நிதி உள்ளடக்கத்தை (Financial Inclusion) வலியுறுத்தி வரும் முக்கிய குரல்களில் ஒருவராகவும் குயின் மேக்சிமா செயல்பட்டு வருகிறார்.இந்தச் சந்திப்பின்போது, இந்தியாவின் டிஜிட்டல் பொதுக் கட்டமைப்பு (Digital Public Infrastructure – DPI) உலகளவில் ஏற்படுத்தியுள்ள மாற்றங்கள் குறித்து பிரதமர் மோடி விரிவாக எடுத்துரைத்தார். குறிப்பாக, ஆதார், யூபிஐ (UPI), டிஜிலாக்கர் உள்ளிட்ட டிஜிட்டல் தளங்கள் மூலம் கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு வங்கிச் சேவைகள் மற்றும் நிதிச் சேவைகள் எளிதாகவும், குறைந்த செலவிலும் கிடைக்க வழிவகுத்துள்ளதை அவர் விளக்கினார்.
மேலும், டிஜிட்டல் பொதுக் கட்டமைப்பு மக்களின் அன்றாட வாழ்க்கையை எளிமையாக்குவதோடு, அரசின் நலத்திட்டங்கள் நேரடியாக பயனாளிகளை சென்றடையவும் முக்கிய பங்காற்றி வருவதாக பிரதமர் மோடி தெரிவித்தார். இதன் மூலம் ‘Ease of Living’ என்ற இலக்கு மேலும் வலுப்பெற்று, சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களும் டிஜிட்டல் பொருளாதாரத்தின் பலனை அனுபவித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவின் டிஜிட்டல் வளர்ச்சி அனுபவத்தை உலக நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள இந்தியா உறுதிபூண்டுள்ளதாகவும், டிஜிட்டல் பொதுக் கட்டமைப்பு தொடர்பான தொழில்நுட்பம், நிர்வாக அனுபவம் மற்றும் சிறந்த நடைமுறைகளை கூட்டாளி நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள இந்தியா தொடர்ந்து தயாராக இருப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.நெதர்லாந்து ராணி மேக்சிமாவின் இந்த இந்திய பயணம், நிதி உள்ளடக்கம், டிஜிட்டல் புதுமைகள் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஆகிய துறைகளில் இந்தியா – நெதர்லாந்து உறவை மேலும் வலுப்படுத்தும் முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.


