தமிழக சட்டப்பேரவையில் உறுப்பினர்களுக்கு குடிநீர் வழங்கும் முறை குறித்து இன்று விவாதம் நடைபெற்ற நிலையில், இதுகுறித்து முன்னாள் தெலுங்கானா ஆளுநரும், பாஜகவின் மூத்த தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் தண்ணீர் வழங்குவது தொடர்பாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் முன்வைத்த கோரிக்கையையும், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற விவாதங்களையும் தொலைக்காட்சியில் பார்த்ததாக தமிழிசை கூறியுள்ளார். நெகிழி பாட்டில்களின் பயன்பாட்டை தவிர்க்கும் நோக்கில் தற்போது சட்டப்பேரவையில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தாம் தெலுங்கானா ஆளுநராக பொறுப்பேற்ற உடனேயே, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே தெலுங்கானா ராஜ்பவனை முழுமையாக பிளாஸ்டிக் இல்லாத வளாகமாக மாற்றியதாக தெரிவித்துள்ளார்.
அப்போது கண்ணாடி குடிநீர் பாட்டில்கள் வாங்கப்பட்டு, ராஜ்பவனுக்கு வரும் அனைத்து விருந்தினர்களுக்கும் அவற்றிலேயே தண்ணீர் வழங்கும் நடைமுறை அமல்படுத்தப்பட்டதாகவும் கூறியுள்ளார்.அந்த கண்ணாடி பாட்டில்களின் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ள தமிழிசை, அதே முறையை தமிழக சட்டப்பேரவையிலும் பின்பற்றலாம் என்று ஆலோசனை தெரிவித்துள்ளார்.
மேலும், அந்த கண்ணாடி பாட்டில்கள் சிறிய அளவில் இருப்பதால் தவறுதலாக கீழே விழுந்தாலோ அல்லது எறியப்பட்டாலோ பெரிய காயம் ஏற்படாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கியுள்ளார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும் நோக்கில் சட்டப்பேரவையிலும் இதுபோன்ற நடைமுறைகளை பரிசீலிக்கலாம் என்ற தமிழிசையின் கருத்து தற்போது அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.


