திருச்செந்தூர் முருகன் கோயிலில் சேவைக் கட்டண உயர்வு – பக்தர்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு. திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பல்வேறு சேவைகளுக்கான கட்டணங்களை உயர்த்த கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து ஆட்சேபனைகள் மற்றும் கருத்துகளும் கோரப்பட்டுள்ளன.
அதன்படி, திருச்செந்தூர் கோயிலில் தங்க ரத உலா சேவைக்கான கட்டணத்தை தற்போதைய ரூ.2,500-இல் இருந்து ரூ.5,000 ஆக உயர்த்த பரிசீலிக்கப்பட்டு வருகிறது. அதேபோல், சண்முகார்ச்சனை சேவைக்கான கட்டணத்தை ரூ.5,000-இல் இருந்து ரூ.30,000 ஆக உயர்த்தவும் கோயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
மேலும், அபிஷேக தரிசனத்திற்கான கட்டணத்திலும் மாற்றம் செய்யப்பட உள்ளது. தற்போது சாதாரண நாட்களில் ரூ.500 மற்றும் விழா நாட்களில் ரூ.2,000 வசூலிக்கப்படும் நிலையில், இதை ஒரே கட்டணமாக ரூ.2,500 ஆக உயர்த்த நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
விலைவாசி உயர்வு, கோயிலின் பராமரிப்பு செலவுகள் அதிகரித்திருப்பது மற்றும் கோயில் வருவாய் குறைந்திருப்பது போன்ற காரணங்களால் இந்த கட்டண உயர்வு அவசியமாகியுள்ளது என கோயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.இந்த சேவைக் கட்டண உயர்வு தொடர்பாக யாருக்கேனும் ஆட்சேபனை அல்லது கருத்துகள் இருப்பின், அவற்றை எழுத்துப்பூர்வமாக வரும் ஜூலை 7-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கலாம் என்றும் திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த கட்டண உயர்வு பக்தர்கள் மத்தியில் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. இறுதி முடிவு, பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் கருத்துகளை பரிசீலித்த பின்னர் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


