மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி 2 நாள் பயணம்: ரூ.18,880 கோடி பிஎம்-கிசான் நிதி, யோகா தின நிகழ்ச்சி, 3 போர்க்கப்பல்கள் நாட்டுக்கு அர்ப்பணம்.
கொல்கத்தா: பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் மேற்கு வங்க மாநிலத்திற்கு இரண்டு நாள் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
இந்த பயணத்தின் போது விவசாயம், ரயில்வே, கிராமப்புற மேம்பாடு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முக்கிய திட்டங்களை தொடங்கி வைக்கவும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும், நாட்டுக்கு அர்ப்பணிக்கவும் உள்ளார்.ஜூன் 20-ஆம் தேதி ஹூக்ளி மாவட்டம் தாரகேஸ்வரில் நடைபெறும் “பஷ்சிம்பங்கா திவாஸ்” (மேற்கு வங்க தினம்) கொண்டாட்டத்தில் பிரதமர் பங்கேற்கிறார். “பாரம்பரியம், ஒற்றுமை மற்றும் வளர்ச்சி” என்ற கருப்பொருளில் நடைபெறும் இந்த நிகழ்வில் மாநிலத்தின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை வலுப்படுத்தும் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன.
இந்த நிகழ்வில் பிரதமர், பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி (PM-KISAN) திட்டத்தின் 23-வது தவணையாக ரூ.18,880 கோடியை நாடு முழுவதும் 9.44 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக வழங்குகிறார். இதில் மேற்கு வங்கத்தில் மட்டும் 45 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு ரூ.900 கோடிக்கும் அதிகமான நிதி சென்றடைய உள்ளது.மேலும், மேற்கு வங்கத்தில் பிரதான் மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் (PMFBY), டிஜிட்டல் வேளாண் திட்டமான அக்ரி ஸ்டாக் (AgriStack), தேசிய இயற்கை வேளாண் இயக்கம் மற்றும் பிரதான் மந்திரி தன்-தான்யா கிருஷி யோஜனா உள்ளிட்ட முக்கிய மத்திய அரசு திட்டங்களின் செயல்பாட்டையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.
இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில் 17,300 ஹெக்டேர் பரப்பளவில் 346 இயற்கை வேளாண் குழுக்கள் அமைக்கப்பட உள்ளன.ரயில்வே துறையில் சுமார் ரூ.590 கோடி மதிப்பிலான திட்டங்களும் அறிவிக்கப்படுகின்றன. ஹவுரா மாவட்டத்தில் சங்க்ரைல்–சாந்த்ரகாச்சி இணைப்புப் பாதை திட்டம் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படுவதுடன், 300 படுக்கைகள் கொண்ட புதிய ரயில்வே மருத்துவமனைக்கும் அடிக்கல் நாட்டப்படுகிறது.
மேலும், 315 கிலோமீட்டருக்கும் அதிக நீளமுள்ள 49 கிராமப்புற சாலைத் திட்டங்களும் திறந்து வைக்கப்படுகின்றன.ஜூன் 21-ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறும் 12-வது சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று யோகா பயிற்சியில் கலந்து கொள்கிறார். “ஆரோக்கியமான முதுமைக்கான யோகா” என்ற இந்த ஆண்டின் கருப்பொருள், உடல் ஆரோக்கியம், மனநலம் மற்றும் சுறுசுறுப்பான முதுமையை வலியுறுத்துகிறது. உலகம் முழுவதும் சுமார் 2,500 இடங்களில் யோகா தின நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
அதேநாளில், கொல்கத்தாவின் சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகத்தில் இந்திய கடற்படைக்காக உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்ட INS Dunagiri, INS Sanshodhak மற்றும் INS Agray ஆகிய மூன்று போர்க்கப்பல்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இந்திய கடற்படையின் Warship Design Bureau வடிவமைத்துள்ள இந்த கப்பல்கள், 200-க்கும் மேற்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் பங்களிப்புடன் GRSE நிறுவனத்தால் கட்டப்பட்டுள்ளன. 75 சதவீதத்திற்கும் அதிகமான உள்நாட்டு கூறுகளைக் கொண்டுள்ள இந்த கப்பல்கள், ‘ஆத்மநிர்பர் பாரத்’ என்ற தன்னிறைவு இந்தியா இலக்கின் முக்கிய அடையாளமாகக் கருதப்படுகின்றன.


