சென்னை: தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக குற்றம்சாட்டியுள்ள தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், குறிப்பாக போக்சோ சட்டத்தின் கீழ் பதிவாகும் வழக்குகள் அதிகரித்து வருவது மிகுந்த கவலையளிப்பதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெண் குழந்தைகளின் பாதுகாப்பை வலியுறுத்தி தமிழக பாஜக சார்பில் நேற்று மாநிலம் முழுவதும் கண்டனப் போராட்டம் நடைபெற்ற நிலையில், இன்று வெளியாகியுள்ள ஒரு செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். கடந்த 18 நாட்களில் திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் 17 போக்சோ வழக்குகள் பதிவாகியிருப்பதாக வெளியான தகவல், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து கடுமையான கேள்விகளை எழுப்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஒரே ஒரு மாவட்டத்தில், அதுவும் வெறும் 18 நாட்களுக்குள் இத்தனை போக்சோ குற்றங்கள் பதிவாகியிருப்பது மிகவும் வேதனையளிப்பதாகக் கூறிய நயினார் நாகேந்திரன், “திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டுமே இந்த அளவுக்கு குற்றங்கள் பதிவாகியிருக்கின்றன என்றால், தவெக ஆட்சி பொறுப்பேற்ற ஒரு மாத காலத்தில் தமிழகம் முழுவதும் எத்தனை பாலியல் குற்றங்கள் நடைபெற்றிருக்கும்? எத்தனை வழக்குகள் பதிவாகாமல் மறைக்கப்பட்டிருக்கும்? எத்தனை குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்பட்டிருக்கும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், தேர்தல் பிரச்சாரங்களிலும் பொதுக்கூட்ட மேடைகளிலும் தன்னை அண்ணன் என்றும் தாய் மாமன் என்றும் கூறிக்கொண்டு மக்களிடம் அன்பை வெளிப்படுத்திய முதல்வர் ஜோசப் விஜய், ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பாக போதிய அக்கறை காட்டவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். “மேடைக்கு மேடை உணர்ச்சிகரமான பேச்சுகளை பேசியவர்கள், ஆட்சியில் அமர்ந்த பிறகு தமிழகக் குழந்தைகளின் பாதுகாப்பை அலட்சியப்படுத்துவது தான் அவர்கள் கூறிய மாற்றமா?” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
போக்சோ குற்றங்கள் அதிகரித்து வரும் சூழலில் வெறும் விளக்கங்களும் வசனங்களும் போதாது என்றும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உடனடி நடவடிக்கைகள் தேவை என்றும் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். மாநில அரசு சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளை தீவிரமாக அணுக வேண்டும் என்றும், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.மேலும், அரசின் முன்னுரிமைகள் குறித்து கேள்வி எழுப்பியுள்ள அவர், “குதிரை பேரம் பேசுவதிலும், சமூக வலைதளங்களில் ரீல்ஸ் வெளியிடுவதிலும் காட்டப்படும் வேகத்தில் ஒரு சிறு பகுதியாவது குழந்தைகளின் பாதுகாப்பிற்காக செலுத்தப்பட்டால், தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு நிலை தானாகவே மேம்படும்” என்று விமர்சித்துள்ளார்.பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வது எந்த அரசுக்கும் முதன்மை கடமையாகும் என்றும், போக்சோ உள்ளிட்ட பாலியல் குற்றங்களை கட்டுப்படுத்த தமிழக அரசு உடனடியாக உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தனது அறிக்கையின் மூலம் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.


