சென்னை: மத ரீதியிலான இடஒதுக்கீடு இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படை கொள்கைகளுக்கு எதிரானது என்று இந்து முன்னணி தெரிவித்துள்ளது. மேலும், முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது குறித்து அமைச்சர் ஷாஜகான் தெரிவித்ததாக வெளியாகியுள்ள தகவல் தொடர்பாக முதல்வர் விஜய் தனது அரசின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக வெற்றிக் கழக அரசு சிறுபான்மையினரின் ஆதரவை மையமாகக் கொண்டு செயல்படுவதாகவும், கூட்டணி கட்சிகளின் அரசியல் அழுத்தங்களால் முதல்வர் விஜய் சிக்கலான சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறாரா என்ற சந்தேகம் எழுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏவும் அமைச்சருமான ஷாஜகான், முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது குறித்து அமைச்சரவை பரிசீலித்து வருவதாக கூறியதாக வெளியாகியுள்ள தகவல், அரசியல் சாசனத்தின் அடிப்படை நோக்கங்களுக்கு முரணானது என்றும், அது அம்பேத்கரின் கொள்கைகளை அவமதிக்கும் செயல் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இடஒதுக்கீடு என்பது சமூக நீதி அடிப்படையில் வழங்கப்பட வேண்டியதாக அரசியல் சாசனம் வலியுறுத்துகிறது என்றும், மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கக் கூடாது என்றும், அதை அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்தக் கூடாது என்றும் அரசியல் சாசனம் தெளிவாக கூறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க முயன்ற சில மாநில அரசுகளின் நடவடிக்கைகளுக்கு பல்வேறு உயர் நீதிமன்றங்களும், உச்ச நீதிமன்றமும் தடை விதித்துள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மத ரீதியிலான பிரிவினை அரசியலை முன்னெடுக்க முயற்சிக்கிறது என்றும், அமைச்சர் ஷாஜகானின் கருத்து முதல்வர் விஜயை மத அடிப்படையிலான அரசியல் விவாதங்களில் சிக்க வைக்கும் முயற்சியாகவே பார்க்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் சமூக மக்களின் உரிமைகள் பாதிக்கப்படும் சூழலை அரசு உருவாக்கக் கூடாது என்றும், இந்துக்களின் உணர்வுகள் மற்றும் உரிமைகளுக்கு தமிழக அரசு உரிய மதிப்பளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். அமைச்சர் கூறியதாக வெளியாகியுள்ள தகவல் உண்மையானதாக இருந்தால், சட்டரீதியான வழிகளில் இந்து முன்னணி போராடும் என்றும், நீதிமன்றத்தின் மூலம் தீர்வு காணப்படும் என்றும் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.


