சென்னை: தமிழக அரசின் நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் மரிய வில்சன் தலைமைச் செயலகத்தில் வெளியிட்டார். மாநிலத்தின் தற்போதைய நிதி நிலை, கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏற்பட்ட கடன் உயர்வு மற்றும் வருவாய் பற்றாக்குறை குறித்து அறிக்கையில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
கரோனா பெருந்தொற்றுக்குப் பிந்தைய 2021-22 முதல் 2025-26 வரையிலான காலகட்டத்தை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்த அறிக்கையில், தமிழகத்தின் வளர்ச்சி குறியீடுகள் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, 2021-ல் ரூ.5.13 லட்சம் கோடியாக இருந்த மாநிலத்தின் நிலுவைக் கடன், 2026 மார்ச் மாதத்திற்குள் ரூ.10 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் விளைவாக, மாநிலத்தில் ஒருவருக்கான கடன் சுமை ரூ.1,28,934 ஆக உயர்ந்துள்ளது. மேலும், ஆண்டுதோறும் செலுத்தப்படும் வட்டித் தொகை ரூ.41,564 கோடியிலிருந்து ரூ.67,050 கோடியாக அதிகரித்துள்ளது. தற்போது மாநிலத்தின் மொத்த வருவாயில் சுமார் 22.8 சதவீதமும், சொந்த வரி வருவாயில் 34.8 சதவீதத்திற்கும் மேற்பட்ட தொகையும் வட்டி செலுத்துவதற்கே பயன்படுத்தப்படுவதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
அதேநேரம், மாநிலத்தின் வருவாய் பற்றாக்குறை கடந்த ஐந்து ஆண்டுகளில் ரூ.46,538 கோடியிலிருந்து ரூ.78,324 கோடியாக உயர்ந்துள்ளது. ஜிஎஸ்டி, பெட்ரோலிய வரி மற்றும் மதுபான வரி உள்ளிட்ட துறைகளில் போதிய மேலாண்மை இல்லாததால் ஆண்டுக்கு சுமார் ரூ.51,000 கோடி வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
மின்துறை நிறுவனங்களின் கடன் மட்டும் ரூ.2.47 லட்சம் கோடியாக இருப்பதாகவும், போக்குவரத்துத் துறையில் ரூ.72,667 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது. இவற்றை அனைத்தையும் சேர்த்து கணக்கிடும்போது, தமிழகத்தின் மொத்த நிதிச்சுமை ரூ.13.18 லட்சம் கோடியை எட்டியுள்ளது.
இந்த நிதி நெருக்கடியை சமாளிக்க வருவாய் திரட்டலை அதிகரித்தல், செலவினங்களை கட்டுப்படுத்தல், பொதுத்துறை நிறுவனங்களில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளுதல் மற்றும் ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்தல் அவசியம் என வெள்ளை அறிக்கை பரிந்துரைக்கிறது.


