ஜம்பூத் தீவு பிரகடனம்: விடுதலை உணர்வை எழுப்பிய வரலாற்றுச் சின்னம்

தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தனது X (ட்விட்டர்) பதிவில் “மருது பாண்டியர் சகோதரர்கள், தங்கள் மண்ணையும் மானத்தையும் எல்லாவற்றிற்கும் மேலாக மதித்து மாபெரும் போராட்டத்தை நடத்திய வீரர்கள். முதல் இந்திய விடுதலைப் போருக்கு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே, ஆற்காடு நவாபின் கூலிப்படையாக வந்து பின்னர் ஆட்சியைக் கைப்பற்ற முயன்ற ஆங்கிலேய ஆக்கிரமிப்பாளர்களை விரட்டியடிக்க ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இந்தியாவின் தென்பகுதி நாவல் பழம் போன்ற வடிவில் இருப்பதால், வேதங்கள் மற்றும் புராணங்களில் அது ‘ஜம்பூத் தீவு’ என்றும், சங்க இலக்கியங்களில் ‘நாவலந்தீவு’ என்றும் அழைக்கப்படுகிறது. மொழி, தொழில், சாதி போன்ற அனைத்து வேறுபாடுகளையும் தாண்டி, இந்தியா முழுவதும் ஒரே தேசம் என்ற உயர்ந்த பார்வையுடன், மருது பாண்டியர் சகோதரர்கள் திருச்சிராப்பள்ளியில் இருந்து ‘ஜம்பூத் தீவு பிரகடனத்தை’ வெளியிட்டனர். அது ஒரு சத்திரியனின் போர்முழக்கம்! இந்திய விடுதலை வரலாற்றின் மகத்தான மைல்கல்! சுதந்திர வேட்கையை உணர்வுகளோடு பின்னிப்பிணைத்த அந்தப் பிரகடனம், கோழையின் இரத்தத்தைக்கூட கொதிக்க வைக்கும் ஆற்றல் கொண்டதாக இருந்தது.

ஆங்கிலேய இராணுவத்தில் அடிமைத்தனமாக பணியாற்றிய நம் சகோதரர்களை, அந்தப் பணியை விட்டு வெளியேறி, வெள்ளையர்களைக் கண்ட இடத்திலேயே வீழ்த்துமாறு அவர்கள் அழைப்பு விடுத்தனர். பின்னாளில் இந்த அழைப்பே ஆயுதப் போராட்டத்தின் அடித்தளமாக அமைந்தது.

அவ்வாறு செய்யாதவர்கள் எந்தப் பாவத்தில் பங்குதாரர்களாக ஆகிறார்கள் என்பதையும் அவர்கள் குறிப்பிட்டனர். மேலும், ‘இந்த இழிந்த ஐரோப்பியர்களை மருது பாண்டியர் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்’ என்ற உறுதியான வார்த்தைகளுடன் அந்தப் பிரகடனத்தை நிறைவு செய்தனர்.

ஆயிரக்கணக்கான வீரர்களைக் கொண்ட படையாலும் மருது சகோதரர்களை பணிய வைக்க முடியாது என்பதை உணர்ந்த துரோக ஆங்கிலேயர்கள், புனிதமான காளையார் கோவில் ஆலயத்தை பீரங்கிகளால் தகர்த்துவிடுவதாக மிரட்டினர். தங்கள் மதத்தையும் கலாச்சாரத்தையும் காப்பதற்காக மருது சகோதரர்கள் உயிர்தியாகம் செய்தனர்.

இந்தியாவை விட்டு வெளிநாட்டவர்கள் வெளியேற வேண்டும் என்று முதன்முறையாக வெளிப்படையாகவும் துணிச்சலாகவும் அறைகூவல் விடுத்தது இந்த ஜம்பூத் தீவு பிரகடனம்தான்.

இந்தியா எப்போதும் தன்னம்பிக்கையுடனும் தலைநிமிர்ந்த நிலையிலும் நிலைத்திருக்க, நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டிய பாரம்பரியச் சின்னமாக ஜம்பூத் தீவு பிரகடனம் திகழ்கிறது.” என்று கூறி உள்ளார்.

Scroll to Top