திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது பெண் குழந்தை பாலியல் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய வடமாநில நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அதேபோல், காஞ்சிபுரம் மாவட்டம் ஆதனூரில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த மற்றொரு வடமாநில நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த சில மாதங்களாக தமிழகத்தின் பல பகுதிகளில் இடம்பெறும் குற்றச் சம்பவங்களில் வடமாநிலங்களைச் சேர்ந்த சிலர் தொடர்புடையதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன. சென்னையில் சங்கிலி பறிப்பு முயற்சி, பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள், வேளச்சேரி மற்றும் மதுரவாயல் பகுதிகளில் பதிவான பாலியல் குற்றங்கள் உள்ளிட்ட பல வழக்குகளில் வடமாநில இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றவாளிகளை விரைவாகக் கண்டறிந்து கைது செய்யும் காவல்துறையின் நடவடிக்கை பாராட்டத்தக்கது. இருப்பினும், குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க தமிழக அரசு கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
பணி நிமித்தமாக பல மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தமிழகத்திற்கு வருவது இயல்பான ஒன்றாகும். ஆனால், பிற மாநிலங்களிலிருந்து வரும் தொழிலாளர்களின் முழு விவரங்கள், அவர்கள் பணிபுரியும் இடங்கள், தங்குமிடங்கள் மற்றும் சொந்த ஊர் தொடர்பான தகவல்கள் முறையாகப் பதிவு செய்யப்பட்டு அரசின் கண்காணிப்பில் இருக்க வேண்டும்.
எனவே, தமிழகத்தில் பணியாற்றும் வெளிமாநிலத் தொழிலாளர்கள் தொடர்பான தகவல்களை உரிமையாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் அரசிடம் கட்டாயமாக சமர்ப்பிக்கும் வகையில் முறைப்படுத்தப்பட்ட கண்காணிப்பு அமைப்பை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும்.


