தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது மிகுந்த கவலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்துவதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வளர்ச்சி திட்டங்களுக்கு கால அவகாசம் கோருவது ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கலாம். ஆனால் சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டை கட்டுப்படுத்துவதற்கு அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என வலியுறுத்தியுள்ளார்.
கடந்த இரண்டு நாட்களில் மட்டும் சிவகங்கையில் ஆயுதப்படை பெண் காவலர், சங்கரன்கோவில் அருகே 10-ஆம் வகுப்பு மாணவி, ஸ்ரீவில்லிப்புத்தூர் பகுதியில் 9 வயது சிறுமி மற்றும் கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது குழந்தை உள்ளிட்டோர் பாலியல் தொந்தரவு மற்றும் வன்கொடுமைக்கு உள்ளாகியிருப்பது தமிழகத்தின் தற்போதைய நிலையை வெளிப்படுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக கும்மிடிப்பூண்டியில் பாலியல் வன்கொடுமைக்குள்ளான 3 வயது குழந்தை உயிரிழந்த நிலையில், அதன் உடல் முட்புதரில் மீட்கப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் மனதை உலுக்கும் சம்பவம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பச்சிளம் குழந்தைகள் முதல் வயதான பெண்கள் வரை யாரும் பாதுகாப்பாக இல்லை என்ற அச்சத்தை இத்தகைய சம்பவங்கள் உருவாக்கியுள்ளன. பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தொடர்ந்து உறுதியளித்து வந்தாலும், குற்றங்கள் குறையாமல் அதிகரித்து வருவதற்கு அரசு என்ன விளக்கம் அளிக்கப் போகிறது என்ற கேள்வியையும் டிடிவி தினகரன் எழுப்பியுள்ளார்.


