வ.உ.சி.யை அவமதித்த ஆதித்யா டிவி மன்னிப்பு கேட்க வேண்டும்- எச். ராஜா

சன் நெட்வொர்க் குழுமத்தின் நகைச்சுவை தொலைக்காட்சி சேனலான ஆதித்யா சேனலில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில், விடுதலைப் போராட்ட வீரரும் “சுதேசி கப்பல்” இயக்கத்தின் முன்னோடியுமான செக்கிழுத்த செம்மல் வ.உ. சிதம்பரம் பிள்ளை குறித்து இரண்டு பெண்கள் ஏளனமாக பேசியதாக சர்ச்சை எழுந்துள்ளது.இந்த சம்பவத்திற்கு பாஜகவின் மூத்த தலைவர் எச். ராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வ.உ.சி. போன்ற மாபெரும் விடுதலைப் போராட்ட வீரரை அவமதிக்கும் வகையில் பேசிய இரு பெண்களையும், அந்த பேச்சுக்கு எந்த ஆட்சேபனையும் தெரிவிக்காமல் நிகழ்ச்சியை நடத்திய தொகுப்பாளரையும், நிகழ்ச்சியை ஒளிபரப்பிய ஆதித்யா சேனல் நிர்வாகத்தையும் வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த விவகாரத்தில் ஆதித்யா சேனல் நிர்வாகம், சன் நெட்வொர்க் குழுமம் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆகியோர் பொதுமக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், நிகழ்ச்சியை நடத்திய தொகுப்பாளரை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், வ.உ. சிதம்பரம் பிள்ளை குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படும் இரண்டு பெண்கள் மற்றும் நிகழ்ச்சியை ஒளிபரப்பிய ஆதித்யா சேனல் நிர்வாகம் மீது தமிழக அரசு உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எச். ராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விவகாரத்தில் பாஜகவின் பல்வேறு மாநில மற்றும் தேசிய தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனால் இந்த சர்ச்சை அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

Scroll to Top