சென்னை: தமிழ் கடவுள் முருகனை மையமாகக் கொண்டு தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்தை இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் வரவேற்றுள்ளார். இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், முருகப்பெருமான் தமிழர்களுக்கு மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் கார்த்திகேயன், சுப்பிரமணியன், கந்தன் உள்ளிட்ட பல்வேறு பெயர்களில் வழிபடப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
சங்க இலக்கியங்கள் முதல் தேவாரம், திருவாசகம், திருப்புகழ் உள்ளிட்ட தமிழ் ஆன்மிக நூல்களிலும் முருகனின் பெருமை போற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். முருக வழிபாடு மொழி, மாநில எல்லைகளைத் தாண்டி உலகம் முழுவதும் பரவியிருப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும், முருகனை குறிப்பிட்ட ஒரு மொழி அல்லது இனத்துடன் மட்டுமே தொடர்புபடுத்தும் முயற்சிகள் தவறானவை என்றும், திரைப்படத்தை தமிழகத்தில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்ற வகையிலான மிரட்டல்களை இந்து மக்கள் கட்சி ஏற்காது என்றும் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.முருக பக்தியை பரப்பும் நோக்கில் உருவாகும் இந்த திரைப்படத்தை வரவேற்பதாகவும், இதற்கு எதிராக வெறுப்பு பிரச்சாரம் மேற்கொள்வது கண்டனத்திற்குரியது என்றும் அவர் கூறியுள்ளார்.
முருகனைப் பற்றிய படைப்புகள் எந்த மொழியில் உருவானாலும் அவற்றுக்கு ஆதரவு அளிப்போம் என்றும், தேவையான பாதுகாப்பை வழங்க இந்து மக்கள் கட்சி தயாராக இருப்பதாகவும் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.


