ஆயுஷ்மான் பாரத் 1.10 கோடி பயனாளிகளுடன் நாட்டிலேயே முதலிடம் பிடித்த தமிழகம்!

பிரதமர் Narendra Modi தலைமையிலான மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் – பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (PM-JAY) திட்டத்தின் கீழ், 1.10 கோடி பயனாளிகள் இலவச சிகிச்சை பெற்றதன் மூலம் தமிழகம் நாட்டிலேயே முதலிடத்தைப் பிடித்துள்ளது.

கர்நாடகா 1.09 கோடி பயனாளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. 2018-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஆயுஷ்மான் பாரத் திட்டம், பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை ரொக்கமில்லா (Cashless) மருத்துவக் காப்பீட்டு வசதியை வழங்குகிறது.

அரசு மற்றும் ஒப்பந்தம் செய்யப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை சிகிச்சைகளை கட்டணமின்றி பெறும் வகையில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இந்தத் திட்டத்தின் கீழ் கோடிக்கணக்கான குடும்பங்கள் பயனடைந்து வருகின்றன.

தமிழகத்தில் இந்தத் திட்டம், மாநில அரசின் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துடன் இணைந்து செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் கண் சிகிச்சை, இதய அறுவை சிகிச்சை, புற்றுநோய், மகப்பேறு, பெண்கள் நல மருத்துவம், எலும்பியல் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு சிகிச்சைகளை ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் இலவசமாகப் பெற்றுள்ளனர்.

நாடு முழுவதும் இதுவரை ரூ.1.56 லட்சம் கோடிக்கும் அதிக மதிப்பிலான இலவச சிகிச்சைகள் இந்தத் திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவச் செலவால் குடும்பங்கள் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்படுவதைத் தடுப்பதிலும், தரமான மருத்துவ சேவையை அனைவருக்கும் அணுகக்கூடியதாக மாற்றுவதிலும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் முக்கிய பங்கு வகிப்பதாக சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Scroll to Top