சேகர் பாபு புளுகு 2 நாள் தான் என்று அமைச்சர் ரமேஷ் விளாசல்!

தமிழக சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத் துறை தொடர்பான விவாதத்தின் போது, அமைச்சர் ரமேஷ் பேசியதற்கு இடையூறாக முன்னாள் அமைச்சர் பி.கே. சேகர்பாபு குறுக்கிட்டு பேசியது அரசியல் வட்டாரத்தில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அப்போது, குன்னூரில் உள்ள ஒரு விநாயகர் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் ரூ.10 கோடி மதிப்பில் அடுக்குநிலை வாகன நிறுத்துமிடம் அமைக்கும் திட்டம் குறித்து அமைச்சர் ரமேஷ் உண்மைக்குப் புறம்பாக தகவல் தெரிவிப்பதாக சேகர்பாபு குற்றம்சாட்டினார்.

மேலும், தனது பதிலில், “அறநிலையத் துறை அமைச்சராக இருந்தபோது எந்தக் கோயில் திட்டத்தையும் நான் தனிப்பட்ட முறையில் முடிவு செய்யவில்லை. சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில்தான் அனைத்து திட்டங்களும் அறிவிக்கப்பட்டன” என்று தெரிவித்தார்.ஆனால், இந்தக் கருத்துக்கு முரணான தகவல் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

குன்னூர் கோயில் செயல் அலுவலர் வெளியிட்ட அதிகாரப்பூர்வ விளக்கத்தில், “மாண்புமிகு அறநிலையத்துறை அமைச்சர் அவர்களின் அறிவுரையின் பேரில் பழைய கட்டிடத்தை அகற்றி, நவீன அடுக்குநிலை வாகன நிறுத்துமிடம் அமைக்க 2024–2025ஆம் ஆண்டிற்கான சட்டப்பேரவை அறிவிப்பில் திட்டம் வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில் பணிகளை நிறைவேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த அதிகாரப்பூர்வ ஆவணத்தை மேற்கோள்காட்டி, சட்டப்பேரவையில் சேகர்பாபு கூறிய விளக்கம் உண்மைக்கு புறம்பானது என்றும், அமைச்சரின் நேரடி அறிவுரையின் அடிப்படையில்தான் இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் தெளிவாகிறது என விமர்சகர்கள் வாதிடுகின்றனர்.இதையடுத்து, “எந்தத் திட்டத்தையும் நான் முடிவு செய்யவில்லை” என்ற சேகர்பாபுவின் சட்டப்பேரவை விளக்கம் கேள்விக்குறியாகியுள்ளது. இதை அரசியல் எதிர்ப்பாளர்கள் கடுமையாக விமர்சித்து, “கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள்; சேகர்பாபு புளுகு இரண்டு நாள்!” என்று கிண்டலடித்து வருகின்றனர்.

இந்த விவகாரம் தற்போது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதிகாரப்பூர்வ ஆவணங்களுக்கும் சட்டப்பேரவையில் முன்வைக்கப்பட்ட கருத்துகளுக்கும் இடையிலான முரண்பாடு குறித்து பல்வேறு தரப்பினரும் விளக்கம் கோரி வருகின்றனர்.

Scroll to Top