விஜய் செய்தது தவறு, உதயநிதி செய்தது மிக தவறு!: CPM கருத்து!

தமிழக அரசியல் அரங்கில் அண்மையில் நடைபெற்ற சட்டமன்ற விவாதங்களில் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள் குறித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனநாயக அரசியலில் தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது இயல்பான நிகழ்வு என்றும், அரசியல் கட்சிகளும் தலைவர்களும் அதனை ஜனநாயக மனப்பான்மையுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சட்டமன்றத்தில் இல்லாத ஒருவரை குறிப்பிட்டு, “அப்பாவைக் காணோம்” என்ற வகையில் முதலமைச்சர் பேசியதாகக் கூறப்படும் கருத்து அரசியல் நாகரிகத்துக்கு ஏற்றதல்ல என்றும், இத்தகைய தனிப்பட்ட விமர்சனங்களும் கேலி பேச்சுகளும் தவிர்க்கப்பட வேண்டியவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.அதேபோல், அதற்கு பதிலடியாக எதிர்க்கட்சித் தலைவர் “கணவனைத் தேடும் மனைவி” என்று விமர்சித்ததும் சரியான அணுகுமுறை அல்ல என்று பெ. சண்முகம் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியல் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்; ஆனால், அவை தனிநபர் கண்ணியத்தையோ குடும்ப உறவுகளையோ இழிவுபடுத்தும் வகையில் வெளிப்படக் கூடாது என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.”ஓடம் ஒரு நாள் வண்டியில் ஏறும்; வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும்” என்ற பழமொழியை நினைவுபடுத்திய அவர், அரசியலில் அதிகாரமும் எதிர்க்கட்சி நிலையும் நிரந்தரமானவை அல்ல என்று கூறியுள்ளார்.

இன்று ஆட்சியில் இருப்பவர்கள் நாளை எதிர்க்கட்சியில் இருக்கலாம்; இன்று எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் நாளை ஆட்சிப் பொறுப்பை ஏற்கலாம். எனவே, அரசியல் தலைவர்கள் அனைவரும் தங்களது பேச்சிலும் செயல்பாடுகளிலும் பொறுப்புணர்வுடனும் கண்ணியத்துடனும் நடந்து கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

சட்டமன்றம் என்பது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் உயரிய ஜனநாயக மேடை என்பதால், தனிப்பட்ட விமர்சனங்களைத் தவிர்த்து, மக்களின் நலன், வளர்ச்சி மற்றும் மாநில முன்னேற்றம் தொடர்பான ஆக்கப்பூர்வமான விவாதங்களிலேயே அரசியல் தலைவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் பெ. சண்முகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Scroll to Top