மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்தியாவின் டிஜிட்டல் மற்றும் பொருளாதார வளர்ச்சியை பெருமையுடன் எடுத்துரைத்தார்.
உலகளவில் போர் பதற்றம், கச்சா எண்ணெய் விலை உயர்வு, எரிவாயு மற்றும் உரத் தட்டுப்பாடு போன்ற சவால்கள் இருந்தபோதிலும், உலகிலேயே வேகமாக வளர்ந்து வரும் முக்கிய பொருளாதார நாடாக இந்தியா திகழ்கிறது என்றார்.இந்தியாவின் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு உலக நாடுகளுக்கு முன்மாதிரியாக இருப்பதாகவும், யு.பி.ஐ. தளம் மாதந்தோறும் 2 ஆயிரம் கோடிக்கும் அதிகமான பரிவர்த்தனைகளை கையாள்கிறது என்றும் தெரிவித்தார்.
மேலும், இந்தியாவில் தற்போது 2,100 உலகளாவிய திறன் மையங்கள் செயல்பட்டு வருவதாகவும், அவை பெருநகரங்களைத் தாண்டி இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களுக்கும் விரிவடைவதாகவும் கூறினார்.நாட்டின் 114 லட்சிய மாவட்டங்களில், தமிழகத்தின் விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்கள் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் பாராட்டினார்.
அதேபோல், விருதுநகர் வத்தல் உள்ளிட்ட உள்ளூர் தயாரிப்புகளை உலக சந்தைக்கு கொண்டு செல்ல சிட்பி வங்கி நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், மாப்பிள்ளை சம்பா, கருப்புக்கவுனி போன்ற பாரம்பரிய நெல் ரகங்களும் மீண்டும் சர்வதேச சந்தையை நோக்கி முன்னேறி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.இந்தியாவின் வளர்ச்சியை உலகம் தவிர்க்க முடியாத சக்தியாக இன்று பார்க்கிறது என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.


