மோடியால் ரூ.14.79 கோடியில் சென்னை பூங்கா ரயில் நிலையம் புதுப்பிப்பு!

சென்னை நகரின் முக்கிய புறநகர் ரயில் நிலையங்களில் ஒன்றான சென்னை பூங்கா (Chennai Park) ரயில் நிலையம், அம்ரித் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ் ரூ.14.79 கோடி செலவில் முழுமையாக மறுசீரமைக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதுப்பிக்கப்பட்ட நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை 17 அன்று காணொலி வாயிலாக நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். நாடு முழுவதும் புதுப்பிக்கப்பட்ட 75 ரயில் நிலையங்களுடன் இதுவும் ஒரே நேரத்தில் திறக்கப்படுகிறது.

புதிய நிலையத்தில் நவீன நுழைவுவாயில், லேண்ட்மார்க் டவர், மேம்படுத்தப்பட்ட டிக்கெட் முன்பதிவு அலுவலகம், காத்திருப்பு பகுதி, புதிய கூரை, புதுப்பிக்கப்பட்ட நடைமேடைகள் மற்றும் கூடுதல் பயணிகள் தங்கும் ஷெட்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பயணிகள் வசதிக்காக 2 லிப்ட்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோருக்கான தடையற்ற (Barrier-free) வசதிகள், மேலும் MRTS நிலையத்தை நேரடியாக இணைக்கும் நடைபாதை உருவாக்கப்பட்டுள்ளது.

1931-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சென்னை பூங்கா ரயில் நிலையம், தற்போது தினமும் சுமார் 198 புறநகர் ரயில்களையும், 29,000 பயணிகளையும் கையாளும் முக்கிய போக்குவரத்து மையமாக உள்ளது. சென்னை சென்ட்ரல், MRTS மற்றும் மெட்ரோ இணைப்புகளுக்கான முக்கிய இடமாகவும் இது செயல்படுகிறது.

இந்த மேம்பாடு, சென்னை நகரில் பயணிகள் வசதி, அணுகல் எளிமை மற்றும் பல்வேறு போக்குவரத்து இணைப்புகளை மேலும் வலுப்படுத்தும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Scroll to Top