மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பூம்புகார் மீன்பிடி துறைமுகம், மத்திய அரசின் சாகர்மாலா திட்டத்தின் கீழ் ரூ.148 கோடி செலவில் உலகத் தரத்திலான நவீன மீன்பிடி துறைமுகமாக மேம்படுத்தப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம், மீனவர்களுக்கு பாதுகாப்பான மற்றும் நவீன படகு நிறுத்தும் வசதிகளை உருவாக்குவதுடன், மீன்களை சுகாதாரமான முறையில் தரையிறக்கி சந்தைப்படுத்துவதற்கான உள்கட்டமைப்பை ஏற்படுத்துவதாகும்.
துறைமுகத்தில் நவீன ஜெட்டி, படகுகள் பாதுகாப்பாக நிறுத்தும் பெர்திங் வசதி, மீன் இறக்கும் தளம், ஏலக் கூடம், குளிர்சாதன சேமிப்பு வசதிகள், குடிநீர், மின்சாரம், சாலை இணைப்பு மற்றும் மீனவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்தத் திட்டத்தின் மூலம் கடலுக்குச் செல்லும் நூற்றுக்கணக்கான மீன்பிடி படகுகள் பாதுகாப்பாக தங்க முடியும். மேலும், புயல் மற்றும் கடல் சீற்றம் போன்ற காலங்களிலும் படகுகளை பாதுகாப்பாக நிறுத்துவதற்கு இந்த துறைமுகம் உதவியாக இருக்கும்.
அதேநேரத்தில், மீன்களின் தரத்தைப் பாதுகாத்து விரைவாக சந்தைக்கு கொண்டு செல்லும் வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளதால், மீனவர்களின் வருமானம் உயரவும், மீன்வளத் துறையின் வளர்ச்சிக்கும் இந்தத் திட்டம் முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், உள்ளூர் மக்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


