காந்திநகர்:மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித் ஷா, கூட்டுறவு அடிப்படையில் செயல்படும் புதிய ரைடு-ஹெய்லிங் தளமான ‘பாரத் டாக்ஸி’ சேவையை குஜராத்தில் தொடங்கி வைத்தார். நாட்டின் வேகமாக வளர்ந்து வரும் போக்குவரத்து துறையில் இது முக்கியமான மாற்றமாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய அமித் ஷா, “ஒரு காலத்தில் ஆடம்பரமாக இருந்த டாக்ஸி சேவை, இன்று கோடிக்கணக்கான மக்களின் அன்றாட தேவையாக மாறியுள்ளது. கும்பமேளா போன்ற பெரிய நிகழ்வுகளில் இருசக்கர வாகனங்கள்கூட டாக்ஸிகளாக இயங்குகின்றன” என்றார். மேலும், தற்போதுள்ள தனியார் டாக்ஸி செயலிகள் ஓட்டுநர்களை சுரண்டுவதாக குற்றம்சாட்டிய அவர், “நான் அவர்களை டிரைவர்கள் என்று அல்ல, ‘சாரதிகள்’ என்று அழைக்க விரும்புகிறேன்.
இதுவரை தனியார் நிறுவனங்கள் லாபத்தின் பெரும்பகுதியை எடுத்துக்கொண்டு, ஓட்டுநர்களின் கணக்குகளை காரணமின்றி முடக்கி, அவர்களை பல்வேறு விதங்களில் பாதித்துள்ளன. ஆனால், பாரத் டாக்ஸியில் அப்படிப்பட்ட சுரண்டல் இருக்காது என்பதை நான் உறுதியளிக்கிறேன்” என்று கூறினார். பாரத் டாக்ஸி, அமுல் கூட்டுறவு முறைபோல உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இதில் ஏற்கனவே 7 லட்சம் ஓட்டுநர்கள் பங்குதாரர்களாகவும் இணை உரிமையாளர்களாகவும் இணைந்துள்ளதாகவும் அமித் ஷா தெரிவித்தார்.
இந்த முறை ஓட்டுநர்களுக்கு மரியாதை, பாதுகாப்பு மற்றும் நீண்டகால பொருளாதார முன்னேற்றத்தை வழங்கும் என்றார். குஜராத்தில் இருசக்கர வாகனங்கள், ஆட்டோ ரிக்ஷாக்கள் மற்றும் கார்கள் உள்ளிட்ட அனைத்து வகை வாகனங்களுக்கும் இந்த சேவை விரிவுபடுத்தப்பட உள்ளது. மேலும், அகமதாபாத் விமான நிலையம், மாநகராட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகியுள்ளன.
பாரத் டாக்ஸி அதிக கட்டணம் வசூலிப்பதாக வெளியான தகவல்களை மறுத்த அமித் ஷா, போட்டி நிறுவனங்கள் தற்காலிகமாக கட்டணத்தை குறைத்து கூட்டுறவு சேவையை சந்தையில் இருந்து வெளியேற்ற முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார். “பாரத் டாக்ஸி சந்தையை விட்டு வெளியேறாது; நிச்சயம் வெற்றி பெறும்” என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.


