தமிழக மின்வாரியத்தின் தற்போதைய நிலை குறித்து அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளார். கடந்த 25 ஆண்டுகளில் மின்வாரியத்தின் நிதிநிலை, மின் தேவை, பணியாளர் பற்றாக்குறை, கடன் சுமை, நிர்வாகக் குறைபாடுகள் உள்ளிட்ட பல முக்கிய தகவல்கள் இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
அமைச்சர் கூறிய முக்கிய அம்சங்கள் பின்வருமாறு: தமிழகத்தின் தற்போதைய உச்சபட்ச மின் தேவை 21,300 மெகாவாட் ஆக உள்ளது. இதற்காக 3,495 மெகாவாட் மின் உற்பத்தித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் 4,246 மெகாவாட் கூடுதல் மின் உற்பத்தித் திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு 13,566 மெகாவாட் கூடுதல் மின் உற்பத்திக்கான திட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
மின்வாரியத்தில் தற்போது 99,573 பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. ஆனால் தற்போது பணியில் இருப்பவர்கள் வெறும் 65,921 பேர் மட்டுமே. இதனால் 33,652 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதில் முதல் கட்டமாக 15,058 புதிய பணியிடங்களை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கை 2026–27ஆம் ஆண்டில் தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்சார நுகர்வோர்களின் எண்ணிக்கையும் கடந்த 25 ஆண்டுகளில் வேகமாக உயர்ந்துள்ளது. 2001ஆம் ஆண்டு 1.35 கோடி மின் இணைப்புகள் இருந்த நிலையில், தற்போது 4,47,603 டிரான்ஸ்பார்மர்கள் மூலம் சுமார் 25 ஆண்டுகளில் 4.50 கோடி மின் நுகர்வோர்கள் பயன்பெறும் அளவுக்கு மின்வாரியம் விரிவடைந்துள்ளதாக வெள்ளை அறிக்கை கூறுகிறது.அமைச்சர் மேலும் கூறுகையில், 2021 முதல் 2026 வரை மின்துறையில் ரூ.87,399 கோடி கடன் அதிகரித்துள்ளது.
இந்தக் கடன் சுமை தொடர்ச்சியாக உயர்ந்தாலும், அதற்கேற்ப சொத்து மதிப்பு உயரவில்லை என்றும், இதுவே மின்வாரியத்தின் நிதிநிலையை பாதித்துள்ளதாக குறிப்பிட்டார்.மின்துறையில் பல ஆண்டுகளாக முறையான பணியாளர் நியமனம் மேற்கொள்ளப்படாததால், தற்போது ஒரே பணியாளர் பல பணிகளை மேற்கொள்ளும் நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக பராமரிப்பு பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கடந்த ஆண்டு மட்டும் கம்பி, டிரான்ஸ்பார்மர் உள்ளிட்ட மின் உபகரணங்கள் திருடப்பட்ட சம்பவங்களால் ரூ.3,440 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், மின் உற்பத்தி, மின் விநியோகம், துணை மின் நிலையங்கள், கட்டமைப்பு மேம்பாடு, நிதிநிலை, கடன் சுமை, பணியாளர் பற்றாக்குறை, உள்கட்டமைப்பு குறைபாடுகள் உள்ளிட்ட அனைத்தையும் வெளிப்படையாக மக்களிடம் எடுத்துரைப்பதற்காகவே இந்த வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாகவும், இதில் பல்வேறு முறைகேடுகள் மற்றும் நிர்வாகக் குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் விளக்கினார். ஆனால், முறைகேடுகளில் தொடர்புடைய தனிநபர்களின் பெயர்கள் இந்த வெள்ளை அறிக்கையில் இடம்பெறாது; அவை தனித்தனி விசாரணைகளின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.


