மாணவர் விடுதியில் காலி மது பாட்டில்கள்: அமைச்சர் ஆய்வில் வெளிச்சத்துக்கு வந்த பகீர் !

திண்டுக்கல் மாவட்டம் கொண்டமாநாயக்கன்பட்டியில் உள்ள கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அமைச்சர் சம்பத்குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவர்கள் மற்றும் மாணவிகளிடம் தனித்தனியாக குறைகளை கேட்டறிந்தார்.

ஆய்வின்போது, பாடங்கள் முறையாக நடத்தப்படவில்லை என்று மாணவிகள் அமைச்சரிடம் நேரடியாக புகார் தெரிவித்தனர். இதையடுத்து மாணவர்களிடம் தனியாக விசாரணை நடத்தியபோது, மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.விடுதியின் வார்டன் தினமும் மது அருந்திவிட்டு மாணவர்களை தாக்குவதாக மாணவர்கள் குற்றம்சாட்டினர். இந்த புகாரைக் கேட்ட அமைச்சர் அதிர்ச்சியடைந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், மாணவர் விடுதி அறைகளை பார்வையிட்டபோது, காலி மது பாட்டில்கள் ஏராளமாக கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. பள்ளி விடுதிக்குள் மது பாட்டில்கள் எப்படி வந்தன? யார் கொண்டு வந்தார்கள்? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.மாணவர்கள் முன்வைத்த புகார்கள் மற்றும் விடுதியில் கண்டுபிடிக்கப்பட்ட சூழ்நிலை குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதேவேளையில், மாணவர்கள் புகார்களை தெரிவித்த பிறகும் அமைச்சர் எந்த அறிவிப்பும் வெளியிடாமல் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சம்பவம், பள்ளி விடுதிகளின் பாதுகாப்பு, நிர்வாக கண்காணிப்பு மற்றும் மாணவர் நலன் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி, உண்மை நிலையை வெளிக்கொணர வேண்டும் என்று பொதுமக்களும், கல்வியாளர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

Scroll to Top