தோஹா: கத்தாரின் ராஸ் லஃபான் (Ras Laffan) தொழிற்பேட்டையில் உள்ள பார்சான் (Barzan) எரிவாயு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்து மற்றும் தீ விபத்தில் 13 பேர் உயிரிழந்த நிலையில், அவர்களில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த 3 இந்தியர்களும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஆலையின் செயல்பாடுகளை மீண்டும் தொடங்கும் பணிகள் நடைபெற்று வந்தபோது திடீரென வெடிப்பு ஏற்பட்டு தீ பரவியது.
இந்த விபத்தில் 66 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த அனைவரும் சிகிச்சை பெற்று வருவதாக கத்தார் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விபத்தில் உயிரிழந்த 13 பேரில் 12 பேர் இந்தியர்கள் என கத்தாரில் உள்ள இந்திய தூதரகம் உறுதி செய்துள்ளது. உயிரிழந்தவர்களின் உடல்களை விரைவாக இந்தியாவிற்கு அனுப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதில் தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி, அவர்களது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்களின் முழு விவரங்கள் மற்றும் உடல்களை சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக கத்தார் எரிசக்தி துறை அமைச்சர் சாட் அல்-காபி தெரிவித்துள்ளார். இது தொழில்நுட்ப கோளாறால் ஏற்பட்ட விபத்து என்றும், எந்தவித சதிச்செயலும் இல்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.


