இந்திய அரசியல் வரலாற்றில் தேசிய ஒருமைப்பாடு, கல்வி வளர்ச்சி மற்றும் தேசப்பற்று ஆகியவற்றின் அடையாளமாக திகழ்ந்தவர் டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜி. பாரதிய ஜனதா கட்சியின் அரசியல் வேர்களாகக் கருதப்படும் ஜனசங்கத்தின் நிறுவனராக அறியப்படும் அவர், இந்தியாவின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்காக தனது வாழ்நாளையே அர்ப்பணித்தார்.
இன்று அவரது நினைவு நாளையொட்டி, அவரது பங்களிப்புகளை நினைவுகூர்வது பொருத்தமானதாகும்.1901 ஜூலை 6-ஆம் தேதி கொல்கத்தாவில் பிறந்த ஷியாமா பிரசாத் முகர்ஜி, சிறுவயதிலிருந்தே கல்வியில் சிறந்து விளங்கினார். அவரது தந்தை சர் அசுதோஷ் முகர்ஜி, கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற கல்வியாளர் ஆவார். தந்தையின் வழிகாட்டுதலால் கல்வித்துறையில் முன்னேறிய அவர், இளம் வயதிலேயே கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பொறுப்பேற்று பல கல்விச் சீர்திருத்தங்களை மேற்கொண்டார்.பின்னர் அரசியலில் நுழைந்த அவர், பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலும் இந்திய மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தார்.
சுதந்திர இந்தியாவின் முதல் அமைச்சரவையில் தொழில் மற்றும் வழங்கல் துறை அமைச்சராக பணியாற்றினார். எனினும், நாட்டின் கொள்கைகள் தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக அமைச்சரவையிலிருந்து விலகினார்.1951-ஆம் ஆண்டு அவர் பாரதிய ஜனசங்கத்தை (RSS) நிறுவினார். இந்தியாவின் கலாச்சார அடையாளம், தேசிய ஒற்றுமை மற்றும் வலுவான ஜனநாயகத்தை வலியுறுத்திய அவரது கொள்கைகள் பின்னாளில் பாரதிய ஜனதா கட்சியின் அடித்தளமாக அமைந்தன. நாட்டின் ஒற்றுமைக்கு அச்சுறுத்தலாக இருக்கும் எந்த நடவடிக்கையையும் அவர் கடுமையாக எதிர்த்தார்.
குறிப்பாக, ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த தனிச்சிறப்பு அந்தஸ்துக்கு எதிராக அவர் தீவிரமாக போராடினார். “ஒரே நாட்டில் இரண்டு அரசியலமைப்புகள், இரண்டு பிரதமர்கள், இரண்டு கொடிகள் இருக்க முடியாது” என்ற அவரது முழக்கம் இந்திய அரசியல் வரலாற்றில் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. காஷ்மீர் முழுமையாக இந்தியாவின் அங்கமாக இருக்க வேண்டும் என்ற அவரது நிலைப்பாடு தேசிய அளவில் பெரும் கவனத்தை ஈர்த்தது.
1953-ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீருக்குள் அனுமதிச் சீட்டு இல்லாமல் நுழைந்ததற்காக கைது செய்யப்பட்ட அவர், சிறையில் இருந்தபோது உடல்நலக்குறைவால் ஜூன் 23-ஆம் தேதி மரணமடைந்தார். அவரது மரணம் அப்போது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.இன்று, இந்திய அரசியலில் தேசிய ஒருமைப்பாடு மற்றும் தேசபக்தியின் அடையாளமாக ஷியாமா பிரசாத் முகர்ஜி நினைவுகூரப்படுகிறார்.
கல்வியாளர், சிந்தனையாளர், அரசியல்வாதி மற்றும் தேசியவாதத் தலைவர் எனப் பல முகங்களைக் கொண்ட அவர், இந்தியாவின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்காக பாடுபட்ட முக்கிய ஆளுமைகளில் ஒருவராக வரலாற்றில் இடம்பிடித்துள்ளார். அவரது தியாகமும் தொண்டும் தலைமுறைகள் பலவற்றுக்கு ஊக்கமாக தொடர்ந்து விளங்கி வருகிறது.


