பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை முடக்கும் விஜய் அரசின் முடிவு நன்றாக ஆலோசித்து எடுக்கப்பட்ட முடிவு அல்ல.

தமிழகத்தின் மிகப்பெரிய தொழில் பேட்டையாக விளங்கும் ஸ்ரீபெரும்புதூர் – ஒரகடம் – இருங்காட்டுக்கோட்டை – திருமழிசை – திருவள்ளூர்- ஆவடி- அம்பத்தூர்- புழல்- பொன்னேரி – எண்ணூர் பகுதியை இன்னும் வளப்படுத்தும் திட்டமாகும்.

இந்தப் பகுதியில் உற்பத்தியாகும் பல கனரக சாமான்களை நாட்டின் மற்ற பகுதிகளுக்குக் கொண்டு செல்ல சாலை வசதி மட்டுமே இருக்கிறது.

சரக்கு ரயில் மூலம் கொண்டு செல்ல ஏகப்பட்ட சிரமங்கள் உள்ளன. இந்த அளவுக்கு சரக்குகளைக் கையாள அக்கோணம் திருவள்ளூர் ஆவடி அம்பத்தூர் ரயில் நிலையங்களில் போதிய வசதி இல்லை.

இருங்காட்டுக்கோட்டையில் தயாராகும் கார்கள் மற்றும் பிற பொருட்கள் தற்போது காஞ்சிபுரம் அருகே உள்ள வாலாஜாபாத் ரயில் நிலையத்திற்குக் கொண்டுவரப்பட்டு அங்கிருந்து ரயிலில் ஏற்றப்படுகின்றன. இதுவும் சிக்கல் தான். உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை உடனடியாக நுகர்வோரிடம் கொண்டு சேர்க்கத் தேவையான சாலை -ரயில்- விமான -கப்பல் வழித்தடம் அருகாமையில் இருப்பது அவசியம்.

சென்னை துறைமுகம், காமராஜர் துறைமுகம், காட்டுப்பள்ளி துறைமுகம் ஆகிய மூன்றும் இந்தத் தொழிற்பகுதிக்கு மிக அருகில் அமைந்திருக்கினன்றன.
கடந்த காலத்தில் இப்பகுதியின் தொழில் வளர்ச்சிக்கு இந்தத் துறைமுகங்கள் பெரிய அளவில் உதவின.

ஆனால் இந்தத் துறைமுகங்களுக்கு அருகில் கிடங்கு வசதிகள் இல்லை.
இதைக் கருத்தில் கொண்டு தான், திருவள்ளூரில் தமிழ்நாட்டின் மிகப்பெரிய நெடுஞ்சாலை – ரயில்வே சரக்கு மையம் ( multi-Modal Transport Hub) தற்போது கட்டப்பட்டு வருகிறது. அரக்கோணம் ரயில் நிலையம் மிகப்பெரிய அளவில் விரிவாக்கப்படுகிறது.

இந்த நிலையில் தான் பரந்தூர் விமான நிலையம் முக்கியத்துவம் பெறுகிறது.
திருவள்ளூர் logistic hub-க்கு
அருகில் அமையப்போகும் பரந்தூர் விமான நிலையம் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு மிகப்பெரிய ஆதாரமாக விளங்கும்.

இந்தத் திட்டத்தை விஜய் அரசு நிறுத்தியது தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியைப் பின்னுக்கு எடுத்துச் செல்லும்.

மீனம்பாக்கம் விமான நிலையம் பெரிய அளவில் சரக்கு போக்குவரத்துக்கு அனுகூலமாக இல்லை.
பெரிய விமானங்கள் ஏறி இறங்க முடியாது. நகரின் மையப் பகுதியில் இருப்பதால்
கனரகப் பொருட்களை விமான நிலையம் வரை கொண்டு செல்வதே கடினம்.

தற்போதுள்ள பயணிகள் போக்குவரத்தைக் கூட கையாள முடியாத நிலையில் உள்ள இந்த விமான நிலையம், மேலும் விரிவாக்கம் செய்ய முடியாத நிலைக்கு வந்துவிட்டது.

எனவேதான் சென்னைக்கு இரண்டாவது பெரிய விமான நிலையம் தேவை.

பரந்தூர் விமான நிலையம் இல்லாமல் மேற்சொன்ன industrial corridor முழுமை அடையாது.

பரந்தூர் விமான நிலையத் திட்டம் வெறும் விமான நிலையத் திட்டம் மட்டுமல்ல.
பல வளர்ச்சித் திட்டங்களை உள்ளடக்கியது.

பயணிகள் போக்குவரத்து, சரக்குப் போக்குவரத்து, கிடங்குகள், நகர்ப்புற வளர்ச்சி, கிராமப்புறங்கள் நகரமயமாதல், புதிய உற்பத்தி ஆலைகள், புதிய தொழில்கள், வேலை வாய்ப்பு, சுயமாகத் தொழில் செய்வோருக்கான வாய்ப்புகள் இப்படிப் பல நன்மைகள் கிடைக்கக்கூடிய மெகா வளர்ச்சித் திட்டம் இது.

ரயில், நெடுஞ்சாலை, விமான நிலையம், துறைமுகம், மெட்ரோ ரயில் காரிடார் ஆகிய ஐந்து போக்குவரத்து முகமைகளையும் ஒருங்கிணைக்கும் திட்டம்.

தடங்கல் இல்லாத, நாடு தழுவிய, supply chain கட்டமைப்பை உருவாக்குவதே இந்த மெகா திட்டத்தின் நோக்கம்.

இது வருங்காலத்தில் மிகப்பெரிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும். வேலைவாய்ப்புகளைப் பெருக்கும். ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாகத் தமிழ்நாட்டை மாற்றும் கனவு நிறைவேற இந்த விமான நிலையம் ஒரு முக்கியமான படிக்கல்.

இந்த ஆண்டு பட்ஜெட்டில் சென்னை -பெங்களூர் சென்னை -ஹைதராபாத் பெங்களூர் -ஹைதராபாத் ஆகிய மூன்று தொழில் வளர்ச்சித் தாழ்வாரங்களை (development corridors) அறிவித்திருந்தது மத்திய அரசு.

மேலும் சென்னை – பெங்களூர் அதிவிரைவு ரயில் தடம் அமைக்கவும் மத்திய அரசு திட்டமிட்டு இருந்தது.

பரந்தூர் விமான நிலையம் இந்தத் திட்டங்களுக்கும் ஒரு முக்கியமான இணைப்புப் பாலமாகும்.

விஜய் அரசு பரந்தூர் விமான நிலையத்தை மட்டும் தடை செய்யவில்லை, அதைச் சுற்றி நிகழ இருந்த பல்வேறு

வளர்ச்சித் திட்டங்களையும் மறைமுகமாகத் தடை செய்து உள்ளது.

பரந்தூர் திட்டம் அறிவிக்கப்படும் முன்பே ஜி-ஸ்கொயர் போன்ற மிகப்பெரிய திமுக சார்பு ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் இந்தப் பகுதியில் ஏக்கர் கணக்கில் அடிமாட்டு விலையில் நிலங்களை வாங்கி குவித்திருக்கிறார்கள். திட்டம் அறிவிக்கப்பட்ட பிறகு, தங்கள் நிலங்களை அதிக விலைக்கு விற்றுப் பெரும் லாபம் ஈட்டுவார்கள். எனவேதான் இந்தத் திட்டம் கைவிடப்படுகிறது என்று கூறப்படும் காரணம் ஒப்புக்கொள்ளும் படியாக இல்லை.

விமான நிலையம் அமையவிருக்கும் நிலத்தில் மிகப்பெரிய தொழில் பேட்டையை அறிவித்திருக்கிறது விஜய் அரசு. எனவே ஏற்கனவே நிலத்தை வாங்கி வைத்திருப்பவர்கள் எந்த விதத்திலும் நஷ்டம் அடையப்போவதில்லை.

இது போன்ற மெகா திட்டங்கள் அரசுகள் மாறும்போது பெரும்பாலும் ரத்து செய்யப்படுவதில்லை.
ஆட்சி மாறினாலும் திட்டங்கள் தொடரத்தான் செய்யும். அதுவே மாநிலத்துக்கும் நல்லது. நாட்டுக்கும் நல்லது.

பரந்தூரில் இதுவரை கையகப்படுத்தப்பட்டதாகச்
சொல்லப்படும் 1700 ஏக்கர் நிலங்கள் மீண்டும் அவற்றின் பழைய சொந்தக்காரர்களுக்கே திரும்பக் கொடுக்கப்படுமா?

தற்போது ஏர்போர்ட் கம்பெனி பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலங்கள் மீண்டும் சிப்காட் பெயரில் பதிவு செய்யப்படுமா?

அந்தப் பகுதியில் வசித்து வந்த மக்களுக்குச் செய்யப்பட்டு வந்த மாற்றுக் குடியிருப்பு வசதிகள் இப்போது என்ன ஆகும்?

அந்த 13 கிராம மக்களில் ஏகனாபுரம் கிராமத்து மக்கள் தவிர மற்ற கிராமத்தினர் விஜய் அரசின் புதிய மாற்றுத் திட்டத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளனரா?

திடீரென்று விஜய் அரசு இத்திட்டத்தை ரத்து செய்தது பற்றி அப்பகுதி மக்கள் கருத்து என்ன?

ஏகனாபுரம் மக்களே முடிவில் இந்தத் திட்டத்தை ஏற்றுக் கொண்ட பிறகு அதை தற்போது மாற்ற அவசியம் என்ன?

இப்படிப் பல கேள்விகள் எழுகின்றன. இதற்கான விளக்கங்கள் விஜய் அரசிடம்
இருக்கும் என்று நம்ப முடியவில்லை.

மேற்கு வங்கத்திலும் இப்படித்தான் நடந்தது.
கம்யூனிஸ்ட் ஆட்சியில் நந்திகிராம் பகுதியில் அறிவிக்கப்பட்ட தொழிற்பேட்டை திட்டத்தை அவர்களுக்குப் பிறகு ஆட்சி அமைத்த த்ருணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி ரத்து செய்தது. ஆனால் அன்று கையாகப்படுத்தப்பட்ட ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள், 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்று வரை அந்த நிலங்களின் பழைய சொந்தக்காரர்களான விவசாயிகளுக்குத் திருப்பி வழங்கப்படவில்லை. ஏகப்பட்ட நடைமுறைச் சிக்கல்களில் சிக்கிக் கொண்டது மம்தா பானர்ஜி அரசு.

பரந்தூரில் இது போல் நடந்தால்? விஜய் அரசு மேற்கு வங்கத்தில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

பரந்தூர் பகுதி மக்கள் ஒரு வழியாக இந்தத் திட்டத்தை மனதளவில் ஏற்றுக்கொண்டு மாற்றத்திற்குத் தயாராகி விட்டிருந்தனர். தற்போது விஜய் அரசு இந்தச் சூழலை மீண்டும் குழப்பி இருக்கிறது.
இதனால் பாதகங்கள் தான் அதிகமே தவிர, சாதகங்கள் அல்ல. விஜய் அரசு இந்த முடிவை மறுபரிசீலனை செய்வது அவசியம்.
(வாசுதேவன்)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top