திருச்சியில் முதல்வர் விஜய்யின் ஆக்ரோஷமான பேச்சைக் கேட்டுக் கொதித்துப் போயிருக்கிறார்கள் திமுக - அதிமுகவினர்.
நாகரிகமற்ற பேச்சு, சினிமா ஸ்டைல் பேச்சு என்று விமர்சனம்.
எல்லோரும் கருணாநிதி மாதிரி எதுகை மோனையுடனா பேச முடியும்? விஜய்க்கு எப்படிப் பேச வருமோ அப்படித்தான் பேசுவார். பேசட்டுமே?
மீண்டும் தவெக Vs. திமுக என்று விஜய் சொன்னதுதான் இவர்களுக்கு எரிச்சல். இதில் தவறு என்ன? இரண்டாவது முறை ஆட்சிக்கு வரத் துடித்தது திமுக தானே? தீய சக்தி, தீய சக்தி என்று விஜய் மீண்டும் மீண்டும் சொல்வது திமுகவைத் தானே? தீய சக்தி தூய சக்தியாகும் வரை அதை எதிர்ப்பது தானே நியாயம்?
திமுக மட்டும் என்னவாம்? திமுக Vs. அதிமுக என்று உண்மை நிலவரத்தைக் கூறாமல், திமுக Vs. டெல்லி என்றுதானே பிரச்சாரத்தைக் கொண்டு போனார்கள்? இது எவ்வளவு பெரிய பொய்?
ஸ்டாலின் பெயரை மூன்று முறை விஜய் குறிப்பிட்டார். பெயரைக் குறிப்பிடுவது நாகரீகமான செயல் தானே? இதில் அநாகரிகம் எங்கே?
திமுக மட்டும் என்னவாம்? நாகரீகத்தைக் கடைப்பிடிக்கும் கட்சியா?
விஜய் ஒரு நடிகையுடன் தனி விமானத்தில் பயணிக்கச் செல்லும்போது, யாரோ திருட்டுத்தனமாக எடுத்த வீடியோவை வலைதளங்களில் வெளியிட்டது யார்?
அண்ணாமலை மட்டும் தான் இந்த இழி செயலைக் கண்டித்தார், நினைவிருக்கட்டும்.
"தொட்டுப் பார்... சீண்டிப்பார்" என்று சொன்னது யார்? முதல்வராக இருந்த ஸ்டாலின் தானே? இது நாகரிகமான செயலா?
ஒரு சிவாஜி கிருஷ்ணமூர்த்தியோ சைதை சையதோ பேசியிருந்தால் விட்டுவிடலாம். ஆனால் திமுகவில் top to bottom இப்படித்தான்.
எடப்பாடி பழனிச்சாமி சசிகலாவின் காலடியில் ஆசி பெற்றதை உதயநிதி எவ்வளவு ஆபாசமாக விமர்சித்தார், நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
ஒரு அமைச்சருக்கு இது அழகா? அது போகட்டும், அன்றைய முதல்வர் இதைக் கண்டித்தாரா? முதல்வராக இல்லை என்றாலும் ஒரு தந்தையாகவாவது கண்டித்தாரா?
"நான் அமைச்சர் பதவியில் இல்லை என்றால், பிரதமர் மோடியை துண்டு துண்டாக வெட்டியிருப்பேன்"
என்று கூறியது யார்? 10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்து, திமுக அரசின் தொழில்துறை அமைச்சராக இருந்த தா மோ அன்பரசன்!
இதையாவது கண்டித்தாரா மு க ஸ்டாலின்?
திமுகவின் கூட்டணிக் கட்சிகளின் தயவில் ஆட்சி அமைப்பதும், அதிமுகவிலிருந்து வருபவர்களை அரவணைத்துக் கொள்வதும்,
அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு விரோதமாம்.
தேர்தலுக்குப் பிறகு புதிய கூட்டணி அமையக் கூடாது என்று அரசியல் சட்டம் எங்கே கூறியது?
ஒரு கட்சியை விட்டு ஒரு எம்எல்ஏ வெளியேறக் கூடாது என்று அரசியல் அமைப்பு சட்டத்தில் எந்தப பிரிவு கூறுகிறது?
விஜய் அரசு நீதிமன்றத்தை அவமதிக்கிறதாம்!
முன்னாள் சென்னை போலீஸ் கமிஷனர் அருணை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றியது நீதிமன்ற அவமதிப்பாம்!
திமுக மட்டும் என்ன, நீதிமன்ற ஆணைகளை அப்படியே நிறைவேற்றியதா?
திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம் மறந்து விட்டதா? இரண்டு முறை நீதித்துறை ஆணையிட்டும் அதை நிறைவேற்றாமல் நீதித்துறையை அவமதித்தது திமுக அரசு தானே?
நீதித்துறை சொன்னபடிச் செய்யாமல் குறைந்தது பத்து முறை நீதிமன்றத்தில் குட்டு வாங்கிக் கொண்டது திமுக அரசு தானே?
IAS IPS அதிகாரிகள் நியமனங்களில் இன்று விஜய் செய்யும் அதே தவறைத் தானே பல மடங்கு அதிகமாகச் செய்தது அன்றைய திமுக?
தங்களுக்குத் தேவையானவர்களை மட்டும்தானே முக்கியமான பதவிகளில் வைத்துக்கொண்டது ஸ்டாலின் அரசு? நாளடைவில் இவர்கள் பல்வேறு அதிகார மையங்களாக மாறவில்லையா?
கடைசியாக... டிஜிபி நியமன விஷயத்தில் மரபுகளையும் மத்திய அரசின் பரிந்துரைகளையும் திமுக வேண்டுமென்றே புறக்கணித்தது. தனக்கு வேண்டிய ஜூனியர் ஒருவரை அந்தப் பதவியில் தற்காலிகமாக நியமித்தது, எதற்கும் கவலைப்படாத திமுக அரசு.
குற்றம் சாட்டப்பட்ட பொன்முடிக்கும் செந்தில் பாலாஜிக்கும் மீண்டும் பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுத்த ஆளுநர் மீது என்னென்ன விமர்சனங்கள் வைத்தார்கள் திமுகவினர்? அவையெல்லாம் மறந்துவிட்டதா?
ஆளுநர் கலந்து கொண்ட தூர்தர்ஷன் நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதில் தடங்கல் ஏற்பட்டதை ஊதி ஊதி பெரிதாக்கிய திமுகவினர்,
அதைத்தொடர்ந்து உதயநிதி கலந்து கொண்ட அரசு விழாவில் அதே தமிழ்த்தாய் வாழ்த்தைச் சரியாக பாடாமல் கடித்துத் துப்பினார்கள். இந்த விஷயத்தைப் பெரிது பண்ண வேண்டாம் என்று உதயநிதியே வெளியே வந்து பத்திரிகையாளர்களிடம் வேண்டிக் கொண்டார், மறந்துவிட்டதா?
அதைத்தொடர்ந்து கோவை சென்ற முதல்வர் நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்தை பாடுவதையே நிறுத்தி விட்டார்கள்..... என்ன தமிழ்ப் பற்று!
விஜய் அரசு தவறுகள் செய்கிறது. ஆனால் அவற்றை சுட்டிக்காட்ட திமுகவினருக்கு எந்த தகுதியும் இல்லை.
(வாசுதேவன்)