15 லட்சம் ஊழியர்களுக்கு ரூ.15,000 ஊக்கத்தொகை!

முதல் முறையாக வேலைக்குச் சேர்ந்த 15 லட்சம் ஊழியர்களுக்கு ரூ.15,000 ஊக்கத்தொகை; இன்று முதல் திட்டத்தை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி நாட்டில் வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கும், ஒழுங்கமைக்கப்பட்ட தொழில் துறையில் புதிய பணியாளர்களை ஊக்குவிப்பதற்கும் மத்திய அரசு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ், முதல் முறையாக வேலைக்குச் சேர்ந்து ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (EPFO) இணைந்துள்ள 15 லட்சம் ஊழியர்களுக்கு தலா ரூ.15,000 ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது.இந்தத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கிறார். இதற்காக மத்திய அரசு மொத்தமாக ரூ.2,400 கோடி நிதியை ஒதுக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதோடு மட்டுமல்லாமல், இளைஞர்கள் ஒழுங்கமைக்கப்பட்ட பணித்துறையில் இணைவதை ஊக்குவிப்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகக் கூறப்படுகிறது.

மத்திய அரசின் அறிவிப்பின்படி, முதல் முறையாக வேலைக்குச் சேர்ந்து EPFO கணக்கில் இணைந்துள்ள ஊழியர்களுக்கு ரூ.15,000 இரண்டு தவணைகளாக வழங்கப்படும். முதல் தவணையாக ரூ.7,500, வேலைவாய்ப்பில் இணைந்து ஆறு மாதங்கள் தொடர்ந்து பணியாற்றிய பிறகு வழங்கப்படும். அதனைத் தொடர்ந்து, ஓராண்டு காலம் பணியில் நீடித்திருப்பவர்களுக்கு இரண்டாவது தவணையாக மேலும் ரூ.7,500 வழங்கப்படும்.இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 15 லட்சம் புதிய ஊழியர்கள் நேரடியாக பயனடைவார்கள் என மத்திய அரசு எதிர்பார்க்கிறது.

குறிப்பாக, கல்லூரிப் படிப்பை முடித்து முதல் முறையாக வேலைக்குச் செல்லும் இளைஞர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் புதிதாக பணியில் சேரும் ஊழியர்களுக்கு இந்த உதவித்தொகை பெரும் ஆதரவாக அமையும் என்று கூறப்படுகிறது.வேலைவாய்ப்பை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வரிசையில், இப்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த ஊக்கத்தொகை திட்டம் இளைஞர்களை ஒழுங்கமைக்கப்பட்ட பணித்துறைக்குள் கொண்டு வருவதற்கும், EPFO பதிவுகளை அதிகரிப்பதற்கும் உதவும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, தொழிலாளர் நலனை மேம்படுத்துவது மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வலுசேர்ப்பது ஆகிய நோக்கங்களுடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனால் நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான இளைஞர்கள் நேரடியாகப் பயனடைய உள்ளனர்.

Scroll to Top