இந்தியாவில் பிரபல தகவல் தொடர்பு செயலியான டெலிகிராமுக்கு (Telegram) மத்திய அரசு தற்காலிகத் தடை விதித்திருப்பது நாடு முழுவதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தடையை எதிர்த்து டெலிகிராம் நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில், மத்திய அரசு நீதிமன்றத்தில் அளித்த விளக்கம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதித் தேர்வான நீட் (NEET) தேர்வில் நடைபெற்றதாகக் கூறப்படும் வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு மோசடிகளுக்கு டெலிகிராம் முக்கிய தளமாக பயன்படுத்தப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நீட் மறுதேர்வு நடைபெறவுள்ள சூழலில், மீண்டும் இதுபோன்ற மோசடிகள் நடைபெறாமல் தடுக்கவே தகவல் தொழில்நுட்பச் சட்டம் பிரிவு 69A-ன் கீழ் டெலிகிராமுக்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டதாக அரசு விளக்கம் அளித்தது.
நீதிமன்றத்தில் வாதிட்ட மத்திய அரசின் தரப்பு, தற்போது டெலிகிராம் “புதிய டார்க் வெப்” (New Dark Web) போல மாறிவிட்டதாகக் குறிப்பிட்டது. குறியாக்க தொழில்நுட்பம், பயனர்களின் அடையாளத்தை எளிதில் கண்டறிய முடியாத தன்மை மற்றும் பெரிய அளவிலான சேனல்கள் ஆகியவை சட்டவிரோத செயல்பாடுகளுக்கு சாதகமாக உள்ளதாக அரசு கூறியது.மேலும், தேர்வு வினாத்தாள் கசிவு மட்டுமல்லாமல் போதைப்பொருள் விற்பனை, குழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோகப் பதிவுகள் பரவல், மோசடி வலையமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களுக்கும் டெலிகிராம் பயன்படுத்தப்படுவதாக மத்திய அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது. குற்றவாளிகளை அடையாளம் காண்பதும், அவர்களை கண்காணிப்பதும் மிகவும் கடினமாக இருப்பதாகவும் கூறப்பட்டது.
இதற்கு பதிலளித்த டெலிகிராம் நிறுவனம், மத்திய அரசின் உத்தரவு அளவுக்கு மீறிய நடவடிக்கை என வாதிட்டது. சிலர் செய்யும் தவறுகளுக்காக 15 கோடிக்கும் அதிகமான இந்திய பயனர்களின் தகவல் பரிமாற்ற உரிமை மற்றும் கருத்துச் சுதந்திரத்தை பறிக்க முடியாது என்று நிறுவனம் தெரிவித்தது. மேலும், சட்டவிரோத உள்ளடக்கங்களை அகற்றுவதற்காக ஏற்கனவே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் கூறியுள்ளது.வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றமும், “சிலரின் தவறுகளுக்காக 15 கோடி பயனர்களின் உரிமைகளை எவ்வாறு கட்டுப்படுத்த முடியும்?” என்று மத்திய அரசிடம் கேள்வி எழுப்பியது.
அதே நேரத்தில் தேர்வின் நம்பகத்தன்மையை பாதுகாப்பதும் அரசின் கடமை என்பதால் இரு தரப்பு வாதங்களையும் நீதிமன்றம் கவனத்தில் எடுத்துள்ளது.நீட் மறுதேர்வு மற்றும் டெலிகிராம் தடை விவகாரம் நாடு முழுவதும் அரசியல் மற்றும் சமூக விவாதமாக மாறியுள்ள நிலையில், டெலிகிராமுக்கு விதிக்கப்பட்ட தற்காலிகத் தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


