பாஜகவின் மூத்த தலைவர் வானதி சீனிவாசன் அவர்கள் பதிவிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலையில் பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர் ஒருவர், மேலதிகாரியின் கண்டிப்பால் சாலையிலேயே கண்ணீர் மல்க பணியாற்றியதாக வெளியாகியுள்ள வீடியோ காட்சிகள் மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளன.
ஏற்கனவே தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்து வரும் நிலையில், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் பொறுப்பில் உள்ள பெண் காவலர்களே இதுபோன்ற மன உளைச்சலுக்கும் அவமானங்களுக்கும் ஆளாக வேண்டிய சூழல் உருவாகியுள்ளது என்பது கவலைக்குரிய விஷயமாகும்.பணியில் குறைபாடுகள் இருப்பின் அவற்றை சுட்டிக்காட்டவும், தேவையான ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அரசுத் துறைகளில் உரிய நடைமுறைகள் உள்ளன. ஆனால் பொதுமக்கள் முன்னிலையில் ஒரு பெண் காவலரை அவமரியாதை செய்யும் வகையில் கண்டிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத செயலாகும். இது அதிகார துஷ்பிரயோகமாகவே பார்க்கப்படுகிறது.
அரசுத் துறைகளில் பணியாற்றும் அனைத்து அதிகாரிகளும், தங்களுக்குக் கீழ் பணிபுரியும் ஊழியர்களை மரியாதையுடனும் கண்ணியத்துடனும் நடத்த வேண்டியது அவசியம். பணியிடங்களில் மனிதநேயம், பரஸ்பர மரியாதை மற்றும் சமத்துவம் நிலைநிறுத்தப்பட வேண்டும். இனி இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில் தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அதே நேரத்தில், இத்தகைய சூழ்நிலைகளில் பெண்கள் கண்ணீர் சிந்துவதை தங்களின் பலவீனமாக மாற்றிக்கொள்ள அனுமதிக்கக் கூடாது. உணர்ச்சிவசப்படாமல், தன்னம்பிக்கையுடனும் மன உறுதியுடனும் சவால்களை எதிர்கொள்ள வேண்டும். ஒருவர் தனது பலவீனத்தை வெளிப்படுத்தும் தருணங்களில் தன்னம்பிக்கை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே, இதுபோன்ற கடினமான சூழல்களை சாதுர்யத்துடனும் தைரியத்துடனும் அணுகி, மன உறுதியுடன் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்துகிறேன்.


