சென்னை: அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், கேமிங் மற்றும் காமிக்ஸ் (AVGC) துறைகளில் இந்திய இளைஞர்களின் திறன்களை மேம்படுத்தி, உலகளாவிய வேலைவாய்ப்புகளுக்கு அவர்களை தயார்படுத்தும் நோக்கில் மத்திய அரசின் புதிய திறன் மேம்பாட்டு திட்டத்தை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், டிஜிட்டல் பொருளாதாரத்தின் வளர்ச்சியில் AVGC துறை மிக முக்கிய பங்காற்றி வருவதாக தெரிவித்தார்.
உலகளவில் அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், ஆன்லைன் கேமிங் மற்றும் டிஜிட்டல் உள்ளடக்கத் தயாரிப்பு ஆகிய துறைகள் வேகமாக வளர்ச்சி பெற்று வரும் நிலையில், இந்தியாவும் இந்த வளர்ச்சியின் மையமாக உருவெடுத்து வருவதாக கூறினார்.குறிப்பாக, இளைஞர்களின் படைப்பாற்றல் மற்றும் தொழில்நுட்ப திறன்களை ஒருங்கிணைத்து புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திறன் AVGC துறைக்கு உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். இதனை கருத்தில் கொண்டு, தொழில்துறையின் தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கும் வகையில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்தத் திட்டத்தின் கீழ் 2D மற்றும் 3D அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், கேம் டிசைனிங், டிஜிட்டல் கதை சொல்லல், காமிக்ஸ் உருவாக்கம், ஆக்மெண்டட் ரியாலிட்டி (AR), விர்ச்சுவல் ரியாலிட்டி (VR), செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த உள்ளடக்க உருவாக்கம் உள்ளிட்ட பல்வேறு நவீன தொழில்நுட்பப் பிரிவுகளில் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. மேலும், தொழில்துறையுடன் இணைந்து நடைமுறை பயிற்சிகள் மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டுதல்களும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, இந்தியாவை உலகின் முன்னணி படைப்பாற்றல் மற்றும் டிஜிட்டல் உள்ளடக்க மையமாக மாற்றுவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், AVGC துறைக்கென தனிப்பட்ட கொள்கைகள் மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருவதாகவும் எல்.முருகன் கூறினார்.
இந்தியாவின் AVGC சந்தை அடுத்த சில ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தத் திட்டம் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு புதிய திறன்களையும் வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் முக்கிய முயற்சியாக அமையும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.நிகழ்ச்சியில் கல்வியாளர்கள், தொழில்துறை பிரதிநிதிகள், மாணவர்கள் மற்றும் திறன் மேம்பாட்டு அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இத்திட்டம் இந்திய இளைஞர்களை உலகளாவிய டிஜிட்டல் பொருளாதாரத்தில் போட்டியிடும் வகையில் தயார்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.


