2026–27 கல்வியாண்டு முதல், மாநில கல்வித் துறையின் கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகளிலும் தேசிய கீதம் மற்றும் தேசியப் பாடலுடன் சேர்த்து காயத்ரி மந்திரம் உள்ளிட்ட இந்து பிரார்த்தனைகளை தினமும் ஓதுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக சத்தீஸ்கர் அரசு செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.
அரசு அதிகாரிகள் கூறுகையில், தேசப்பற்று உணர்வை வளர்த்தல், மாணவர்களின் அறிவுத்திறன் மேம்பாட்டை ஊக்குவித்தல் மற்றும் இந்திய கலாச்சாரம், பாரம்பரியங்களை அறிமுகப்படுத்துதல் ஆகிய நோக்கங்களுக்காக இந்த கலாச்சார, கல்வி மற்றும் நற்பண்பு சார்ந்த தினசரி செயல்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என்றனர்.
ஜூன் 12-ஆம் தேதி பள்ளிக் கல்வித் துறை அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் (DEO) அனுப்பிய உத்தரவின்படி, இனி பள்ளிகளில் நாள்தோறும் மூன்று வேளைகளில் கட்டாய நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
புதிய வழிகாட்டுதலின்படி, காலை பிரார்த்தனைக் கூட்டத்தில் தேசிய கீதம், தேசியப் பாடல், தீப் மந்திரம், சரஸ்வதி வந்தனா, குரு மந்திரம் மற்றும் சிறந்த ஆளுமைகளின் வாழ்க்கை வரலாறு வாசிப்பு ஆகியவை இடம்பெறும்.
மதிய உணவு நேரத்தில் மாணவர்கள் அனைவரும் சேர்ந்து ‘போஜன் மந்திரம்’ (உணவு பிரார்த்தனை) ஓத வேண்டும். பள்ளி முடியும் நேரத்தில் நடைபெறும் நிறைவு நிகழ்ச்சியில் மாநிலப் பாடல், காயத்ரி மந்திரம் மற்றும் சாந்தி மந்திரம் இடம்பெறும்.
இந்த முயற்சி மாணவர்களிடையே தேசப்பற்று, ஒழுக்கம், நற்பண்புகள் மற்றும் கலாச்சார விழிப்புணர்வை வளர்ப்பதோடு, இந்திய பாரம்பரியம் மற்றும் தேசிய இலட்சியங்களுடனான அவர்களின் தொடர்பை வலுப்படுத்தும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த உத்தரவை மாவட்டக் கல்வி அலுவலர்கள் கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. பள்ளிகளில் ஆய்வுகள் நடத்தப்படும்; விதிமுறைகளை மீறும் பள்ளி நிர்வாகங்கள் அல்லது தலைமை ஆசிரியர்கள் மீது நிர்வாக நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


