இந்தியாவில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் ஏர்பஸ் C-295 ராணுவ சரக்கு விமானம், குஜராத் மாநிலம் வடோதராவில் உள்ள டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் (TASL) மற்றும் ஏர்பஸ் இறுதி அசெம்பிளி மையத்திலிருந்து தனது முதல் சோதனைப் பறப்பை வெற்றிகரமாக நிறைவு செய்தது.
‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட இந்த விமானத்தின் வெற்றிகரமான சோதனைப் பறப்பு, இந்திய விமானத் தயாரிப்பு துறைக்கு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது. மேலும், இந்திய விமானப்படையில் (IAF) விரைவில் இணைக்கப்படுவதற்கான பாதையையும் இது அமைத்துள்ளது.
கடந்த 2021-ஆம் ஆண்டு, பழைய AVRO ரக விமானங்களை மாற்றும் நோக்கில், ₹21,935 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தின் கீழ் 56 C-295 விமானங்களை இந்தியா வாங்கியது. இதில் முதல் 16 விமானங்கள் ஸ்பெயினின் செவில்லே நகரில் தயாரிக்கப்பட்டு இந்தியாவுக்கு வழங்கப்படுகின்றன. மீதமுள்ள 40 விமானங்கள் இந்தியாவில் டாடா மற்றும் ஏர்பஸ் நிறுவனங்களின் கூட்டாண்மையில் தயாரிக்கப்படுகின்றன.
தற்போது சோதனைப் பறப்பை வெற்றிகரமாக முடித்துள்ள இந்த விமானம், தேவையான பரிசோதனைகள் நிறைவடைந்த பின்னர் வரும் செப்டம்பரில் இந்திய விமானப்படைக்கு அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டம் இந்தியாவின் பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு நோக்கத்தை மேலும் வலுப்படுத்தும் என கூறப்படுகிறது.


